உத்தர பிரதேசத்தில் கனமழை எச்சரிக்கை; 12-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை..!!
உத்தர பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. இதனால், பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது. வீடுகள் மற்றும் கடைகளுக்கு உள்ளும் வெள்ளநீர் புகுந்து உள்ளது. ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லூரியில் நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகளுக்கு உள்ளேயும் நீர் புகுந்துள்ளது. இதனால், வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. டெல்லி மற்றும் என்.சி.ஆர். பகுதிகளில் நேற்று பெய்த தொடர் கனமழையால், நொய்டாவின் பல பகுதிகளில் நீர் தேங்கி காணப்படுகிறது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என எச்சரிக்கை விடுத்து உள்ளது. இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு (12-ந்தேதி வரை) மழை பெய்யும் என்றும் தெரிவித்து உள்ளது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., மதரசா கல்வி வாரியம் மற்றும் சமஸ்கிருதம் பயிற்றுவிக்கும் பள்ளிகள் உள்பட பல்வேறு நகரங்களில் குழந்தைகள் முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுகிறது என அரசு அறிவித்து உள்ளது. இதன்படி, லக்னோ, நொய்டா, காசியாபாத், கான்பூர் மற்றும் ஆக்ரா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு நகரங்களை சேர்ந்த பள்ளிகளும் இன்று மூடப்பட்டு இருக்கும்.