சிக்னலுக்காக நிறுத்தப்பட்ட ரெயிலில் இருந்து இறங்கி ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்..!!
பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில், தற்போது பையப்பனஹள்ளியில் உள்ள சர் எம்.விஸ்வேசுவரய்யா ரெயில் முனையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் கே.பி.அக்ரஹாரா, ராஜாஜிநகர், சிவாஜிநகர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். கடந்த 2-ந்தேதி முதல் பையப்பனஹள்ளியில் இருந்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து பெங்களூருவுக்கு வரும் அந்த ரெயில், அடிக்கடி பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்தில் சிக்னலுக்காக நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால், அதில் இருக்கும் பயணிகள் மெட்ரோ ரெயிலை பிடிக்க அங்கேயே இறங்கி செல்கிறார்கள்.
அந்த ரெயில் நடைமேடை அருகே நிறுத்தப்படாமல், நடுவில் உள்ள தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஆனாலும் பயணிகள், சர் எம்.விஸ்வேசுவரய்யா ரெயில் முனையம் வரை செல்ல பொறுமை இல்லாமல், பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்திலேயே இறங்கி ஆபத்தான முறையில் தண்டவாளங்களை கடந்து நடைமேடையில் ஏறி செல்கிறார்கள். அந்த சமயத்தில் ரெயில் எதுவும் வந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.