;
Athirady Tamil News

கர்நாடகத்தில் ராகுல் காந்தி 8-வது நாளாக பாதயாத்திரை..!!

0

தேச ஒற்றுமையை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம்(செப்டம்பர்) 7-ந் தேதி பாதயாத்திரையை தொடங்கினார். தமிழ்நாட்டின் கடைகோடியில் உள்ள கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாதயாத்திரை கேரளாவில் 19 நாட்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அதே மாதம் 30-ந் தேதி ராகுல் காந்தியின் பாதயாத்திரை சாம்ராஜ்பேட்டை மாவட்டம் குண்டலுப்பேட்டை வழியாக கர்நாடகத்திற்கு வந்தது. அங்கு ராகுல் காந்திக்கு பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நஞ்சன்கூடு, மைசூரு, மண்டியா வழியாக பாதயாத்திரை துமகூரு மாவட்டத்திற்கு வந்தது. இந்த நிலையில் ராகுல் காந்தி நேற்று தனது 32-வது நாள் பாதயாத்திரையை மேற்கொண்டார். இது கர்நாடகத்தில் 8-வது நாளாக நடக்கும் பாதயாத்திரை ஆகும். காலை 6.30 மணிக்கு துமகூரு மாவட்டம் திப்தூர் கே.பி.கிராஸ் பகுதியில் இருந்து ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத் உள்பட மூத்த நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். 6.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த நடைபயணம் நீடித்தது. அதன்பிறகு காலை 11 மணிக்கு சிக்கநாயக்கனஹள்ளியில் உள்ள கனக பவனில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

செல்பி புகைப்படம்
பின்னர் அங்கிருந்து 4 மணிக்கு பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு யாத்திரை மேற்கொண்டு 7 மணி வரை சிக்கநாயக்கனஹள்ளி ஹுலியூர் பொச்கட்டே பகுதிக்கு வந்தடைந்தார். அத்துடன் நேற்றைய பாதயாத்திரை நிறைவடைந்தது. சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை நடைபெற்றது. நேற்று இரவு ஹுலியூரில் ராகுல் காந்தி தங்கினார். இன்று (திங்கட்கிழமை) காலை 6.30 மணிக்கு ராகுல் காந்தியின் பாதயாத்திரை அங்கிருந்து தொடங்குகிறது. பாதயாத்திரை நடைபெற்ற வழியில் பெண்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினர் ராகுல் காந்தியுடன் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அவர்களை ராகுல் காந்தி அன்புடன் வரவேற்று புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதித்தார்.

பாதயாத்திரைக்கு எதிராக போஸ்டர்
ராகுல் காந்தியின் பாதயாத்திரை நடைபெற்ற பகுதிகளில் அவற்றுக்கு எதிராக பா.ஜனதாவினர் ஆங்காங்கே சுவா்களில் போஸ்டர்கள் ஓட்டி இருந்தனர். அதில், காங்கிரசார் தங்களின் சுயநல அரசியலுக்காக மக்களை திசை திருப்ப வேண்டாம் என்றும், சித்தராமையா ஆட்சி காலத்தில் இந்துக்கள் கொலை செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த போஸ்டர்களால் பாதயாத்திரை நடைபெற்ற பகுதிகளில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் கடும் கண்டனம்
பா.ஜனதாவினரின் போஸ்டர் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான பரமேஸ்வர் கூறுகையில், ‘ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு கர்நாடகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் ஆளும் பா.ஜனதாவினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதன் காரணமாக பாதயாத்திரைக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இது அவர்களின் பயத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது. இந்த போஸ்டர் விவகாரத்திற்கு எதிராக நாங்களும் பதிலடி கொடுப்போம். இதுகுறித்து ஆலோசித்து முடிவு செய்வோம்’ என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.