;
Athirady Tamil News

இந்தியா 7 சதவீத பொருளாதார வளர்ச்சி அடையும்: பிரபல பொருளாதார நிபுணர் கணிப்பு..!!

0

பிரபல பொருளாதார நிபுணரும், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினருமான சஞ்சீவ் சன்யால், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உலகின் பல நாடுகள் மெதுவான பொருளாதார வளர்ச்சியை எதிர்கொள்ளும் அல்லது மந்த நிலையை அடையும். இதற்கு கடுமையான பணக்கொள்கை, எரிசக்திக்கு அதிக விலை, உக்ரைன் போர் என பல கலவையான பல காரணங்களை சொல்லலாம். இத்தகைய சூழ்நிலைகளில் இந்தியா நன்றாக செயல்பட்டு 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்து உலகில் வலுவான பொருளாதார நாடாக தனித்து நிற்கும். மோடி அரசு பல ஆண்டுகளாக செய்து வருகிற வினியோக சீர்திருத்தங்களின் ஒட்டுமொத்த தாக்கம் காரணமாக, இந்தியாவின் பொருளாதாரம் தற்போது முன்பைவிட மிகவும் நெகிழ்வானதாகவும், மீள்தன்மையுடனும் உள்ளது. 2002-03-லிருந்து 2006-07 வரையில் இருந்த உலகளாவிய பொருளாதார சூழல், அதாவது உலகளாவிய பொருளாதார வளர்ச்சி, பணவீக்க அழுத்தம் வீழ்ச்சி போன்றவை இப்போது அமைந்தால், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது 9 சதவீத அளவை எட்ட முடியும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு சூழல் இல்லை என்பது வெளிப்படை. எனவே இப்போதைய சூழலில் நாம் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டிப்பிடிப்பது நல்ல செயல்பாடுதான். அதே நேரத்தில் சாலையில் பல வேகத்தடைகளும், புடைப்புகளும் இருக்கிறபோது, வாகனத்தின் வேகத்தை கூட்டக்கூடாது என்பதுபோலவே தேவையற்று பொருளாதார வளர்ச்சியில் அழுத்தம் கொடுக்கக்கூடாது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்தது பற்றி கேட்கிறீர்கள். இதை வைத்து நாம் பெரிய அளவில் பதற்றம் அடையத்தேவை இல்லை. எல்லா நாணயங்களுக்கு எதிராகவும் டாலர் வலுவாகி இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. ஆனால் நமது ரூபாய், டாலரைத் தவிர்த்து பிற நாணயங்களுக்கு எதிராக உயர் மதிப்பை அடைந்திருக்கிறது என்று அவர் கூறினார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.