குஜராத்தில் இன்று 2-வது நாள் பயணம்: பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்..!!
குஜராத் மாநிலத்தில் வருகிற டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதா கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி 3 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். அங்கு மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மோதேரா கிராமம் சூரிய மின்சக்தி கிராமமாக மாறியுள்ளது. இந்த கிராமத்தில் நேற்று நடந்த விழாவில் ரூ.3,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அங்குள்ள மோதேஸ்வரி மாதா கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். 2-வது நாள் பயணமாக இன்று பருஜ் மாவட்டத்தில் உள்ள அமோத்தில் ரூ.8 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ஜாம்புஷர் நகரில் மருந்து உற்பத்தி, சேமிப்புக்கான கட்டிடத்திற்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரசாயன துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் தாஹேஜ்ஜில் முடிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். மேலும் மாவட்டத்தில் உள்ள பல தொழில் பூங்காக்களை மேம்படுத்துவதற்கான அடிக்கல்நாட்டு விழாவிலும் அவர் பங்கேற்கிறார். தொடர்ந்து அகமாதாபாத் செல்லும் பிரதமர் மோடி அங்கு ஏழை மாணவர்களுக்கான கல்விக்கூடமான மோடி ஷைசானிக் சன்குல்லை திறந்து வைக்க உள்ளார். மேலும் அனந்த் அகமாதாபாத் மாவட்டத்தில் உள்ள வல்லப்வித்யாநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மாலையில் ஜாம்நகரில் ரூ.1,460 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டங்கள் நீர்பாசனம், மின்சாரம், நீர்வளங்கள் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது.