குஜராத் இளைஞர்களின் வாழ்க்கையை அழிக்க நகர்ப்புற நக்சல்கள் முயற்சி- பிரதமர் மோடி கடும் தாக்கு..!!
குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இரண்டாம் நாளான இன்று பரூச் மாவட்டத்தில் மொத்த மருந்து பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நகர்ப்புற நக்சல்கள் தங்கள் தோற்றத்தை மாற்றிக் கொண்டு குஜராத்தில் நுழைய முயற்சிப்பதாகவும், ஆனால் இளைஞர்களின் வாழ்க்கையை அழிக்க அரசு அனுமதிக்காது என்றும் ஆம் ஆத்மி கட்சியை மறைமுகமாக தாக்கினார். ‘நகர்ப்புற நக்சல்கள் புதிய தோற்றத்துடன் மாநிலத்திற்குள் நுழைய முயற்சிக்கின்றனர்.
அவர்கள் தங்கள் உடைகளை மாற்றியுள்ளனர். அவர்கள் நம் இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார்கள். நம் இளம் தலைமுறையை அழிக்க விடமாட்டோம். நாட்டை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நகர்ப்புற நக்சல்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என நமது குழந்தைகளை எச்சரிக்க வேண்டும். அவர்கள் அந்நிய சக்திகளின் ஏஜெண்டுகள். அவர்களிடம் குஜராத் தலை குனியாது, குஜராத் அவர்களை அழித்துவிடும்’ என பிரதமர் மோடி பேசினார்.
மேலும், சர்தார் படேலின் கனவுத் திட்டமான நர்மதா நதி அணையை நகர்ப்புற நக்சல்கள் முடக்க முயன்றதாகவும், பட்டேலின் கனவை நனவாக்க 40-50 ஆண்டுகள் நீதிமன்றங்களில் கழித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.