மட்டக்களப்பு சகாயபுரம் தூய சதா சகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!!! (படங்கள்)
மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கத்தோலிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு மாமாங்கம் சகாயபுரம் தூய சதா சகாய அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று (09) திகதி கொடியிறக்கத்துடன் 2022 ஆம் ஆண்டுக்கான ஆலய திருவிழா இனிதே நிறைவடைந்துள்ளது.
கடந்த 30 ஆம் திகதி பங்குத்தந்தை பிறைனர் செல்லர் அடிகளாரின் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி கடந்த ஒன்பது நவ நாட்கள் திருவிழாவாக சிறப்பிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற நற்கருணை ஆராதனை வழிபாட்டுடன் அன்னையின் திருச்சொரூப பவனி மிக பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இடம்பெற்ற விசேட திருவிழா கூட்டுத் திருப்பலியினை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் தலைமையில் பங்குத்தந்தையும் இணைந்து ஒப்புகொடுத்திருந்திருந்தனர்.
ஆலய திருவிழாவினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் தலைமையில் மாணவர்களுக்கான புதுநன்மை, உறுதிபூசுதல் திருவருட்சாதனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து ஆலய முன்றலில் இடம்பெற்ற அன்னையின் திருச்சுரூப ஆசீருடன் ஆலய திருவிழா கொடியிறக்கப்பட்டு நிறைவுபெற்றது.
இந்த திருவிழா திருப்பலியில் பெருமளவான பங்கு மக்கள் மற்றும் அயல் பங்கு மக்கள் என பெருமளவானோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”