;
Athirady Tamil News

கோவில் குளத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த சைவ முதலை உயிரிழப்பு- பக்தர்கள் அஞ்சலி..!!

0

கேரளா மாநிலம், காசர்கோடு மாவட்டம், கும்பளா பகுதியில் உள்ளது அனந்த பத்மநாபசுவாமி கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமான குளத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக முதலை ஒன்று வாழ்ந்து வந்தது. பாபியா என்ற பெயரிப்பட்ட அந்த முதலைக்கு, தினசரி பூஜைகளுக்குப் பிறகு, ஒரு நாளைக்கு இரண்டு முறை பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது.

கோவிலில் நைவேத்தியம் செய்யப்பட்ட பச்சரிசி சாதம் வெல்லம் ஆகியவற்றை காலையிலும், மதியமும் அர்ச்சகர் குளத்தில் போடுவார். அந்தப் பிரசாதத்தையே இந்த முதலை சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்துள்ளது. கோவில் குளத்தில் மீன்கள் அதிகமாக உள்ள போதும் இந்த முதலை அவற்றை உண்பதில்லை. மேலும் பாபியா மூர்க்கமாக நடந்து கொண்டதாகவோ, பக்தர்களைத் தாக்கியதாக இதுவரை எவ்வித சம்பவமும் நடைபெறவில்லை.

இந்த கோவிலின் அருகாமையில் ஆறு அல்லது மற்ற நீர்நிலைகள் எதுவும் இல்லை. ஆனால் இந்த முதலை எப்படி கோவில் குளத்தை அடைந்தது என்பதைக் குறிக்கும் பதிவுகள் கோவிலில் இல்லை.1945 ஆம் ஆண்டு ஆங்கிலேய சிப்பாய் ஒருவர் இந்த ஆலயத்தில் ஒரு முதலையைச் சுட்டுக் கொன்றதாகவும், அடுத்த சில நாட்களில் மற்றொரு முதலை, கோவில் குளத்தில் தென்பட்டது என்று கோவில் புராணம் கூறுகிறது.

ஒருமுறை, இந்த முதலை கோயில் கருவறைக்கு முன் வந்து சாமி தரிசனம் செய்ததை அர்ச்சகர் தனது செல்போனில் படம் பிடித்து வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த நிலையில் நேற்றிரவு அந்த முதலை இறந்தது. அதன் உடல் கோவில் வளாகத்தில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. தெய்வீக தன்மை கொண்டதாக கருதப்படும் அந்த முதலைக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.