ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விரைவில் செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பும்- மத்திய மந்திரி தகவல்..!!
இந்திய விண்வெளி கூட்டமைப்பின் முதலாம் ஆண்டுவிழா மாநாட்டு டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மத்திய விண்வெளி மற்றும் அணுசக்தித் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது: இந்திய விண்வெளித் துறையில், தனியார் துறையினருக்கு சுதந்திரம் வழங்குவது, இளம் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன.
செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விரைவில் தொடங்கும். இந்திய இளம் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆற்றல் மற்றும் புதிய சிந்தனைகள் நமது விண்வெளி தொழில்நுட்பத்தை உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றி வருகிறது.
தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய விண்வெளிக் கூட்டமைப்பு,முதலீடுகளையும் பெற்று வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து அந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இஸ்ரோவின் சாதனைகள் மூலம் உலக அளவில் இந்திய விண்வெளி கூட்டமைப்பு அங்கீகாரத்தையும், புகழையும் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.