நடிகர் பவன் கல்யாண் கும்பகர்ணனை போன்றவர்- ஜெகன்மோகனை குற்றம் சாட்டியதற்கு அமைச்சர் ரோஜா பதிலடி..!!
ஆந்திரா மாநில பிரபல சினிமா நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் வரும் 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 3 நாட்கள் விசாகப்பட்டினத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து பவன் கல்யாண் நிருபர்களிடம் கூறுகையில்:- ஜெகன்மோகன் தேர்தல் வாக்குறுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் 2.50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். கொரோனா தொற்றுக்கு முன்பாக அரசு பள்ளிகளில் 44 லட்சம் மாணவர்கள் படித்து வந்தனர். ஆனால் தற்போது அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் 4 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியில் சேர்ந்து உள்ளனர். விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதற்காக 30 ஆயிரம் ஏக்கர் நிலங்களை விவசாயிகள் வழங்கினர். ஆனால் ஜெகன்மோகன் ஆட்சிக்கு வந்த பிறகு 3 இடங்களில் தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என விவசாயிகளை மோசம் செய்து உள்ளார். அரசு ஊழியர்கள் இந்த ஆட்சியில் ஏராளமான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். ஜெகன்மோகன் தேர்தல் வாக்குறுதியில் அளித்த எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என பல்வேறு குற்றசாட்டுகளை கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் ரோஜா நிருபர்களிடம் கூறுகையில்:- ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் கும்பகர்ணனை போல் 6 மாதம் தூங்கிக் கொண்டு இருப்பார். மீதியுள்ள 6 மாதம் விழித்துக் கொண்டு இருப்பார். இவர் சந்திரபாபு நாயுடுவின் பினாமி. அவர் சொல்லிக் கொடுப்பதை தான் இவர் பேசிக்கொண்டு இருக்கிறார். இவரது சுற்றுப்பயணத்தை கண்டு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அஞ்சி விடும் என நினைக்க வேண்டாம். எங்கள் ஆட்சியில் மக்களுக்கு தேவையான ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். அதனால் எங்களுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது நாங்கள் யாரைக் கண்டும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றார்.