ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்..!!
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2 பிரிவாக செயல்பட்டு வருகிறது. அடுத்த மாதம் 3-ம் தேதி அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் மனைவி போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரேவுக்கு வில், அம்பு சின்னத்தை ஒதுக்கக் கூடாது என ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது.
இதனால் தேர்தல் ஆணையம் சிவசேனாவின் பெயர், வில், அம்பு சின்னத்தை முடக்கியது. மேலும் 2 தரப்பினரும் வேறு பெயர், சின்னத்துடன் செயல்பட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஷிண்டே தரப்பினரும் 3 சின்னம், பெயர்களை தேர்வு செய்து அதில் ஒன்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதில் அவர்கள் கடாயுதம், முரசு, வாள் ஆகிய 3-ல் ஒரு சின்னத்தையும், பால்தாக்கரே மற்றும் சிவசேனா வருமாறு 3 பெயர்களையும் சமர்ப்பித்தது.
இதனை பரிசீலித்த தேர்தல் ஆணையம், ஷிண்டே அணிக்கு பாலாசாகேபஞ்சி சிவசேனா என்ற பெயரை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், ஷிண்டே அணியினர் கோரிய 3 சின்னங்களையும் நிராகரித்தது. புதிய சின்னங்களின் பட்டியலை அளிக்கும்படி கோரியது. அதன்படி சின்னம் தொடர்பாக விருப்ப சின்னங்களின் புதிய பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. அரசமரம், வாள், சூரியன் ஆகிய 3 சின்னங்களை விருப்பமாக கோரி தேர்தல் ஆணையத்தில் ஏக்நாத் ஷிண்டே அணி முறையிட்டிருந்தது. இதனை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், இரட்டை வாள் மற்றும் கேடயத்தை சின்னமாக ஒதுக்கி உத்தரவிட்டது.