சோலார் யுனிவர்ஸ் அங்குரார்ப்பணம் !!
10 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தரைத் தளத்தில் பொருத்தப்பட்ட சோலார் யுனிவர்ஸ் சூரிய மின் நிலையம், மட்டக்களப்பு, வவுணதீவில் இன்று (11) காலை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்தாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
வின்ட் போர்ஸ், விது லங்கா மற்றும் ஹை-எனர்ஜி ஆகிய நிறுவனங்களால் குறித்த சோலார் யுனிவர்ஸுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நாட்டிலேயே முதல் விவசாய மின்னழுத்த சூரிய மின் நிலையம் இது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது ஆண்டுக்கு 20 ஜிகாவோட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்புக்கு வழங்கும் என்று தெரிவித்த அமைச்சர், 15,000 மெற்றிக் தொன் காபனீரொட்சைட் உமிழ்வை வருடாந்தம் குறைக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சூரிய மின் நிலையத்தில் 18,676 சோலார் ஃபோட்டோவோல்டாயிக் (பிவி) தொகுதிகள் கொண்ட 243 ஒற்றை அச்சு தடமி (சூரிய வெளிச்சத்தை நோக்கி திரும்பும்) தொகுதிகள் பொருத்தப்பட்டுள்ளன என்றார்.
47 இன்வேர்ட்டர்கள், நான்கு ஸ்மார்ட் மின்னழுத்த நிலையங்கள் மற்றும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப்படுத்தல் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.