;
Athirady Tamil News

போதைப்பொருள் தொடர்பில் கைதாகும் மாணவர்களை சிறைப்படுத்தாது , சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்!!

0

போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைதாகும் மாணவர்களை சிறைப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட்டு , சரியான மருத்துவத்தை பெற்றுக்கொடுத்து உளவள ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆரோக்கியத்திற்கான இளையோர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆரோக்கியத்திற்கான இளையோர் இயக்கம் ஊடகங்களுக்கு இன்றைய தினம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

போதைப்பொருள் பொருள் பாவனையானது இலங்கையை மிகவும் பாதித்து வருகிறது. குறிப்பாக வடமாகாண இளைஞர் யுவதிகள் மத்தியில் ஐஸ்,கஞ்சா போன்ற உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை மிக வேகமாக அதிகரித்து வருகின்றமை யாவரும் அறிந்ததே.

நம்முடைய அதிகாரிகள் தன்னார்வ தொண்டு அமைப்புகளுடன் இணைந்து “போதைவஸ்து” பாவனைக்கு எதிராக போராடிவருகின்றமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகவும், அத்துடன் அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும் என்பதை ஆரோக்கியத்திற்கான இளையோர் இயக்கம் வலியுறுத்துகிறது.

மிகவேகமாக அதிகரித்துவரும் போதைவஸ்துக்கு எதிராக அனைவரும் விழிப்புணர்வு பெற்று வருவதால் “காவல் துறையும்” மிகவும் வேகமாக செயல்பட்டுவருவதை தினசரி செய்திகளினூடாக அறியக்கிடைக்கிறது.

இதனை நாம் வெகுவாக பாராட்டுகிறோம். மேலும் பொலிஸாருக்கு உறுதுணையாக குறித்த விடையத்தில் செயல்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தும் அதே சமயம், போதைவஸ்து பாவனையால் “கைதாகும் மாணவர்களை” சிறைப்படுத்தும் நடவடிக்கைளை போலீசார் கைவிடவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

பாடசாலை மாணவ மாணவிகளை கைது செய்தால், அவர்களை சிறைப்படுத்துவதை விடுத்து “சரியான மருத்துவத்தை” பெற்றுக்கொடுப்பதுடன் கவுன்சிலிங் மூலமாக போதைப்பொருள் பாவனையில் இருந்து விடுபடுவதற்கான சீர்திருத்த பணியை முன்னெடுத்துச் செல்ல போலீசார் உறுதுணை புரிய வேண்டும்

போதைப்பொருள் பாவனை என்பதும் போதைப்பொருள் விற்பனை என்பது இரு வெவ்வேறு விடையங்கள் என்பதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

போதைப்பொருள் பாவனையில் இருந்து எமது இளம் சந்ததியினரை காப்பதே எமது கடமை என்பதையும் நினைவில் கொண்டு போலீசார் கடமையாற்றவேண்டும் என்பதை ஆரோக்கியத்திற்கான இளையோர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.