சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த நபருக்கான தண்டனையை உறுதி செய்தது பூந்தமல்லி நீதிமன்றம்..!!
வங்காளதேச நாட்டில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் வந்த டி மகபுல் சேசம் பாட்ஷாவை ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் பிடித்து விசாரித்த போது உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் 2021 ம் ஆண்டு டி மகபுல் சேசம் பாட்சாவிற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அம்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமினில் வந்தவர் திருச்சியில் உள்ள அயல்நாட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்டம் அமர்வு நீதிமன்றம் இரண்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன் இன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது, கீழமை நீதிமன்றம் வழங்கிய 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையை உறுதி செய்து, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.