5ஜி சேவை தாமதம்- தொலைதொடர்பு, செல்போன் நிறுவனங்களுக்கு சம்மன்..!!
இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை இன்டர்நெட் வசதியான 5ஜி சேவையை சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதையடுத்து இந்தியாவில் முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் சில முக்கிய நகரங்களில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை தொடங்கிவிட்டதாக அறிவித்தன. ஆனால் பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் அதற்கான மென்பொருள் அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை.
இதுபற்றி தொலைதொடர்பு துறைக்கு புகார்கள் சென்றன. குறிப்பாக 5ஜி போன்களை கொண்ட வாடிக்கையாளர்கள் கூட தங்கள் செல்போனில் அதன் சேவையை பெறவில்லை. இதைத்தொடர்ந்து செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைதொடர்பு துறை சம்மன் அனுப்பி உள்ளது. அதில் மத்திய தொலை தொடர்பு துறையால் புதன்கிழமை நடைபெறும் உயர்மட்ட குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தொலை தொடர்பு செயலாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சாம்சங், ஆப்பிள், ஓப்போ, விவோ, ஷியோமி, கார்போன், லாவா, மைக்ரோமேக்ஸ், மோட்டோரோலா உள்பட அனைத்து முக்கிய செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா ஆகிய தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் 5ஜி அதிவேக இணையதள சேவையை செல்போன்களில் அளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட மென்பொருள் அப்டேட் விரைவில் வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகையில், தசரா நேரத்தில் 5ஜி சேவை அறிமுகம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில 5ஜி டவர்கள் மட்டுமே உள்ளன. டெல்லியில் கூட மிக குறைந்த அளவிலான கவரேஜ் கொண்ட சில 5ஜி டவர்கள் மட்டுமே உள்ளது என்றனர்.