இருமல் மருந்தால் 66 குழந்தைகள் பலியான விவகாரம்- நிபுணர் குழுவை அமைத்தது மத்திய அரசு..!!
அரியானா மாநிலம் சோனிபட்டில் செயல்படும் மெய்டன் மருந்து நிறுவனம் சளி மற்றும் இருமலுக்காக 4 வகையான மருந்துகளை தயாரித்து வருகிறது. இவை ஆப்பிரிக்காவின் காம்பியா நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த மருந்துகளை உட்கொண்ட 66 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இந்திய இருமல் மருந்துகளில் டை எத்திலின் கிளைக்கால் அல்லது எத்திலின் கிளைக்கால் நச்சு கலந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், காம்பியா குழந்தைகள் மரணம் தொடர்பான உலக சுகாதார நிறுவனம் வழங்கியிருக்கும் முதற்கட்ட அறிக்கையை ஆய்வு செய்ய 4 நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. மருந்துகள் தேசியக்குழு துணைத்தலைவர் டாக்டர் ஒய்.கே.குப்தா, புனே ஐ.சி.எம்.ஆர் அதிகாரி டாக்டர் பிரக்யா யாதவ், டெல்லி தொற்றுநோயியல் பிரிவு அதிகாரி டாக்டர் ஆர்த்தி பால், மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரி ஏ.கே.பிரதான் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக மத்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிக்கு இந்த குழு பரிந்துரை வழங்கும். இதற்கிடையே சோனிபட்டில் இயங்கி வரும் மெய்டன் மருந்து நிறுவனம், தனது உற்பத்தியை நிறுத்தி வைக்குமாறு அரியானா மாநில அரசு நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.