மக்களின் தேவைகளை முந்தைய அரசுகள் செய்யவில்லை, எனது அரசு நிறைவேற்றுகிறது- பிரதமர் மோடி பேச்சு..!!
நாட்டின் அதிவேக ரெயிலான வந்தே பாரத் விரைவு ரெயில் சுமார் 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த ரெயில் சேவை கடந்த 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. வந்தே பாரத் ரெயிலின் 3-வது ரெயில் சேவையை குஜராத்தின் காந்தி நகருக்கும், மராட்டியத்தின் மும்பைக்கும் இடையே கடந்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்தநிலையில் 4-வது ரெயில் சேவையை இமாச்சல பிரதேச மாநிலம் உனா ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதேபோல அவர் உனாவில் உள்ள ஐ.ஐ.டி.யை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதோடு மருத்துவ பூங்காவுக்கு அடிக்கல்லும் நாட்டினார். 4-வது வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைத்த பிறகு உனாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இமாச்சல பிரதேசத்தில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான பரிசுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மருந்து, கல்வி மற்றும் ரெயில்வே திட்டங்கள் பிராந்தியத்தின் முன்னேற்றத்தால் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
மக்களின் தேவைகளை எனது அரசு நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. 20 மற்றும் 21ம் நூற்றாண்டுகளின் வசதியை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம். இதற்கு முந்தைய அரசுகள் மக்களுக்கு வசதிகளை வழங்கவில்லை. மத்திய அரசும், மாநில அரசும் (இரட்டை என்ஜின் அரசு) மருந்து பூங்காவில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் இமாச்சல பிரதேசத்தில் மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்தி நடைபெறும்போது மருந்துகள் மலிவாகிவிடும். இவ்வாறு மோடி பேசினார். பின்னர் சம்பா பகுதியில் 2 நீர்மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி கிராம சாலை திட்டத்தை தொடங்கி வைத்தார். கடந்த 5 ஆண்டில் பிரதமர் மோடி இமாச்சல பிரதேசம் சென்றது இது 9-வது முறையாகும். வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ள குஜராத், இமாச்சலபிர தேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.