உள்ளக பொறிமுறைக்குள் தீர்வுக்கு முயல்கிறோம் !!
பொறுப்புக்கூறல் விடயத்தில் உள்ளக பொறிமுறையின் ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல்வதாகத் தெரிவிக்கும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, அடுத்த மாதம் நடைபெறும் புலம்பெயர் அமைப்புகளுடனான கலந்துரையாடல் வெற்றிபெற்றால், இலங்கை விடயத்தில் சர்வதேசத்தின் தலையீடுகள் இருக்காதெனவும் தெரிவித்தார்.
நீதி அமைச்சில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சர்வதேச பொறிமுறையின் ஊடாக சர்வதேச நிறுவனங்களின் கண்காணிப்பின் கீழ் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க வேண்டும் என்பதே ஐ.நாவின் நோக்கமாக இருக்கிறது. எனினும் இப்பிரச்சினைகளை தீர்க்க இலங்கையே சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
தேசிய பொறிமுறையின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது. தேசிய பொறிமுறையின் ஊடாக சில பெறுபேறுகள் கிடைக்கும் பட்சத்தில் சர்வதேசத்தின் ஒத்துழைப்புகள் கிடைக்கும் எனவும் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறையோடு செயற்பட்டு வருகிறது. இது தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட குழு பல பரிந்துரைகளையும் வழங்கியிருக்கிறது. இப்பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் நானும் ஜனாதிபதியும் பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகிறோம். அடுத்த மாதமும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறும். இது வெற்றியடைந்தால், இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீடுகளை இல்லாது , இலங்கைக்கு ஆதரவளிக்கும் எனவும் தெரிவித்தார்.