இமாச்சல பிரதேசத்திற்கு ஒரே கட்டமாக நவம்பர் 12ம் தேதி தேர்தல்..!!
182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபையின் பதவி காலம் பிப்ரவரி 18-ந்தேதி முடிவடைகிறது. இதே போல 68 இடங்களை கொண்ட இமாச்சலபிரதேச சட்டசபையின் பதவி காலம் ஜனவரி 8-ந்தேதி முடிகிறது. இதைத்தொடர்ந்து குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்து உள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தது. இந்த நிலையில் இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் கமிஷனின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இமாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 12ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி 25ம் தேதி நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் பரிசீலனை அக்டோபர் 27ம் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 29ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.