2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை வந்து விடும்; நிர்மலா சீதாராமன்..!!
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.அவர் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த 5ஜி சேவை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- பிரதமர் மோடி, குறிப்பிட்ட சில நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கி வைத்துள்ளார். 2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை வந்து விடும். 5ஜி சேவை இன்னும் பொதுமக்களை சென்றடையவில்லை. இந்தியாவில் தொடங்கப்பட்ட 5ஜி சேவை முற்றிலும் தனித்துவம் மிக்கது. இதற்கான சில பாகங்கள், தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்து வந்திருக்கலாம். ஆனால் எந்த நபரிடம் இருந்தும் வரவில்லை.எனவே 5ஜி தொழில்நுட்பம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது அல்ல. எங்களது சொந்த தயாரிப்பு. முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது.வேறு நாடுகள் விரும்பினால், அவற்றுடன் 5ஜி சேவையை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். 5ஜி விஷயத்தில், இந்தியாவின் சாதனையை நினைத்து பெருமைப்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.