தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா வட தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களில் இன்று தொடங்கி வரும் 19ந் தேதி வரை இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் 12 சென்டிமீட்டரும், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 11 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரி, மேமாத்தூர் பகுதிகளில் 10 சென்மீட்டர் மழை பெய்துள்ளது.