;
Athirady Tamil News

உண்மையான மின் நுகர்வோருக்கு மட்டுமே மானியம்- மின்சாரத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் ஒப்புதல்..!!

0

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த மின்சாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்றது. மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை மந்திரி ஆர்.கே சிங் இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். மத்திய மின்துறை இணை மந்திரி கிரிஷன் பால் குர்ஜார், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்கள், முதன்மைச் செயலாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மின் துறை சீர்திருத்தங்கள், 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வது, நிதி மற்றும் விநியோகத் துறையின் நிலைத்தன்மை, மின் அமைப்புகளை நவீனமயமாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவை குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன. மாநில அரசுகளின் மானியம், நிலுவைத் தொகைகள், உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் பணம் பட்டுவாடா செய்தல் மற்றும் மின் கட்டணம் சம்பந்தப்பட்ட விதிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. இழப்புகளைக் குறைப்பதற்காக, நுகர்வோருக்கான ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதற்கான கணினி அளவீட்டை விரைவுபடுத்த இந்த ஆலோசனையின் போது ஒப்புக் கொள்ளப்பட்டது.

உண்மையான மின்நுகர்வுக்கு யூனிட் அடிப்படையில் மட்டுமே மானியம் வழங்கப்படும் என்றும் இந்த மாநாட்டில் ஒப்புக் கொள்ளப்பட்டது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துவது குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. 40 ஜிகாவாட் என்ற ஒட்டுமொத்த மின் உற்பத்தி இலக்கை எட்டுவதை உறுதி செய்வதற்காக, சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்தை விரைந்து செயல்படுத்த மாநிலங்கள் முயற்சிக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக மத்திய மின்சாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.