வவுனியாவில் புதிதாக நிறுவப்பட்டுக் கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பம் உடைந்து விழுந்தது: மயிரிழையில் தப்பிய ஊழியர்!! (PHOTOS)
வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் புதிதாக நிறுவப்பட்ட உயர் அழுத்த மின்கம்பம் உடைந்து விழுந்த நிலையில், மின்கம்பத்தில் ஏறி நின்று வேலை செய்த ஊழியர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் ஒன்று நேற்று (15.10) இடம்பெற்றுள்ளது.
வவுனியா, வேப்பங்குளம், 7 ஆம் ஒழுங்கையில் அதி உயர் மின்னழுத்த மின்கம்பங்கள் நிறுவும் நடவடிக்கை மின்சார சபையால் முன்னெடுக்கப்பட்டது. மூன்று மின்கம்பங்களை புதிதாக நிறுவி அதன் ஊடாக மின் இணைப்பு வயர்களை இழுத்துக் கொண்டிருந்த போது மின்கம்பம் ஒன்று உடைந்து விழுந்துள்ளது.
மின்கம்பம் உடைந்து விழுத்த போது குறித்த கம்பத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர் உயர் அழுத்த மின் கம்பத்தின் அருகில் இருந்த உயரக் கட்டிடத்தில் குதித்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இதேவேளை, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குறித்த மின்கம்பம் சரியான முறையில் கம்பிகள் உள்ளீடு செய்து தரமானதாக அமைக்கப்படாமையே அது உடைந்து விழுந்தமைக்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதுடன், இதனால் புதிதாக நிறுவப்பட்டுள்ள உயர் அழுத்த மின்கம்பங்கள் தொடர்பில் தாம் அச்சத்துடனேயே வாழ வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.