ஒரே நாடு, ஒரே உரம் திட்டம்…நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!!
டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிரதமரின் கிசான் சம்மான் சம்மேளன் என்ற இரண்டு நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடி நாளை காலை காலை 11:30 மணி அளிவில் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதிலும் இருந்து சுமார் 13,500 விவசாயிகளும்,1500 வேளாண் தொழில் நிறுவனத்தினரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணொலிக் காட்சி வாயிலாக ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகளும், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் விவசாயிகளின் நலனுக்கான பிரதமரின் விவசாய நிதி உதவித் திட்டத்தின் கீழ் 12-வது தவணையாக, ரூ. 16,000 கோடி மதிப்பிலான நிதியை பிரதமர் விடுவிக்கிறார். இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 வீதம் 3 தவணையாக தலா ரூ. 2000 வழங்கப்பட்டு வருகிறது. பிரதமரின் விவசாய நிதி உதவித் திட்டத்தின் கீழ் நேரடி பலன் பரிவர்த்தனையின் மூலம் நாடு முழுவதும் பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு இதுவரை சுமார் ரூ. 2 லட்சம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாடு, ஒரே உரம் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். பாரதம் என்ற ஒரே பெயரில் உரங்களை நிறுவனங்கள் சந்தைப்படுத்துவதற்கு உதவியாக நிகழ்ச்சியின்போது பாரத யூரியா பைகளையும் பிரதமர் அறிமுகப்படுத்துவார். மேலும் மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் 600 விவசாயிகள் உதவி மையங்களையும் பிரதமர் திறந்து வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.