ஏழைகளின் வீட்டு வாசலுக்கு வரும் வங்கி சேவை- 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேச்சு..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்களையொட்டி 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் ஏற்படுத்தப்படும் என மத்திய பட்ஜெட் உரையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதன் படி, பிரதமர் மோடி டெல்லியில் இன்று இந்த திட்டத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இது அனைவரையும் உள்ளடக்கிய நிதி நடைமுறையை மேலும் வலுப்படுத்தும் மற்றொரு நடவடிக்கை. நாட்டில் நிதி உள்ளடக்கத்தில் இது புரட்சியை ஏற்படுத்தும்.
பின் தங்கிய பகுதி மக்களுக்கு சேவை செய்வதற்கான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக ஏழைகளின் வீட்டு வாசலுக்கு வங்கிகளை கொண்டு செல்ல அரசு முன் முயற்சி எடுத்துள்ளது. டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்த இது உதவும். டிஜிட்டல் வங்கி அலகுகள் மக்களுக்கு வங்கி அனுபவத்தை மேம்படுத்தும். இது சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் நடவடிக்கையின் முக்கியமான ஒன்றாகும். குறைந்தபட்ச டிஜிட்டல் உள்கட்டமைப்பு மூலம் அதிகபட்ச சேவைகளை இது வழங்கும். மத்திய அரசு திட்டப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடி பண பரிமாற்றம் மூலம் அரசு இதுவரை ரூ.25 லட்சம் கோடியை விடுவித்துள்ளது. பிரதமர் விவசாய நிதி திட்டத்தின் மற்றொரு தவணை நாளை விடுவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.