மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: கலந்தாய்வு நாளை தொடக்கம்..!!
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ‘நீட்’ தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில், அதில் தேர்ச்சி பெற்றவர்கள், மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி, கடந்த மாதம் (செப்டம்பர்) 22-ந் தேதி முதல் கடந்த 6-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பப்பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.
இதில் அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் உள்ள 6 ஆயிரத்து 67 எம்.பி.பி.எஸ்., ஆயிரத்து 380 பி.டி.எஸ். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22 ஆயிரத்து 736 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 8 ஆயிரத்து 29 மாணவர்கள், 14 ஆயிரத்து 24 மாணவிகள், ஒரு திருநங்கை என மொத்தம் 22 ஆயிரத்து 54 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதேபோல், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஆயிரத்து 310 எம்.பி.பி.எஸ்., 740 பி.டி.எஸ். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 ஆயிரத்து 470 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 13 ஆயிரத்து 272 விண்ணப்பங்கள் தகுதியுடையவையாக கருதப்பட்டன.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 454 எம்.பி.பி.எஸ். இடங்களும், 104 பி.டி.எஸ். இடங்களுக்கு 2 ஆயிரத்து 695 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆயிரத்து 910 மாணவிகள், 764 மாணவர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 674 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
தரவரிசை பட்டியல் வெளியீடு
அவ்வாறு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று நடந்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். இதில் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் முத்துச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களை பெற்றவர்களின் விவரம் வருமாறு:-
1.எஸ்.திரிதேவ் விநாயகா (நீட் தேர்வு மதிப்பெண்-705)-மதுரை, 2.எம்.ஹரிணி (702)-கோவை, 3.பி.சொக்கலிங்கம் (700)-சென்னை, 4.எஸ்.பி.சஞ்சய் கிருஷ் (700)-கிருஷ்ணகிரி, 5.ஆர்.வி.சுதர்சன் (700)-ஈரோடு, 6.எம்.சுவேதா (696)-நாமக்கல், 7.பி.ஹரிணி (695)-சென்னை, 8.கே.ஏ.பரத் (695)-ஈரோடு, 9.ரினிட் ரவிச்சந்திரன் (695)-சென்னை, 10.ஸ்டீவ் மனோஜ் (695)-சென்னை.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளின் விவரம் வருமாறு:-
1.வி.தேவதர்ஷினி (518)-ஈரோடு, 2.பி.சுந்தர்ராஜன் (503)-குரோம்பேட்டை, செங்கல்பட்டு, 3.இ.பிரவீன்குமார் (481)-வேலூர், 4.பி.பிருந்தா (467)-விழுப்புரம், 5.ஆர்.ராகுல் (466)-ஈரோடு, 6.ஏ.எஸ்.சத்யாதேவி (463)-திருவள்ளூர், 7.பி.ராஜ்குமார் (455)-சேலம், 8.சி.சிவகுமார் (446)-சேலம், 9.பி.பவித்ரா (444)-சேலம், 10.டி.ஆர்.தாசபிரகாசம் (439)-திருவண்ணாமலை.
அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் மாணவிகளைவிட மாணவர்களே அதிகம் இடம் பெற்று இருக்கின்றனர். அதேபோல், சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசையிலும் 10 இடங்களில் மாணவர்களே இடம் பெற்றுள்ளனர்.
கலந்தாய்வு அட்டவணை
தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், அடுத்தகட்டமாக கலந்தாய்வு நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. சிறப்பு பிரிவு மற்றும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு இன்று முதல் கலந்தாய்வு தொடங்கி நடைபெற உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு 20-ந் தேதி (நாளை மறுதினம்) மட்டும் கலந்தாய்வு நடக்கிறது. இதில் சிறப்பு பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு மட்டும் நேரடியாக நடத்தப்படுகிறது. மற்ற பிரிவினருக்கு ஆன்லைன் வாயிலாகவே நடக்க உள்ளது.
பொதுப் பிரிவினருக்கு நாளை தொடங்கும் கலந்தாய்வு 25-ந் தேதி வரையிலும், சுயநிதி கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 21-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரையிலும் நடக்கிறது. இதன்படி, முதல் சுற்று கலந்தாய்வு நிறைவுபெற்று, 27 மற்றும் 28-ந் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, 30-ந் தேதி இறுதி முடிவுகள் வெளியிடப்படும். முதல் சுற்று கலந்தாய்வில் தேர்வானவர்கள் அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந் தேதி கல்லூரிகளில் சேரவேண்டும்.
வகுப்பு தொடங்குவது எப்போது?
அதை தொடர்ந்து 2-வது சுற்று கலந்தாய்வு அடுத்த மாதம் 7-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி வரையிலும், அதற்கான இறுதி முடிவுகள் 15-ந் தேதி வெளியிடப்பட்டு, கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு 21-ந் தேதி வரையிலும் அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. பின்னர், முழுமைச் சுற்று (மாப்-அப்) டிசம்பர் 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையிலும், விடுபட்ட காலியிடங்களுக்கான இறுதிச்சுற்று 17-ந் தேதியும் நடத்தப்பட உள்ளது. 2022-23-ம் கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்குபெற்று, கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் அடுத்த மாதம் 15-ந் தேதி தொடங்குகின்றன.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த 445 பேர், பி.டி.எஸ். படிப்பில் சேர்ந்த 109 பேர் ஆகிய 554 மாணவ-மாணவிகளுக்கு கடந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில் மடிக்கணினி வழங்கப்பட்டது. நடப்பாண்டில் (2022-23) உள்ஒதுக்கீட்டில் 454 எம்.பி.பி.எஸ். இடங்களிலும், 104 பி.டி.எஸ். இடங்களிலும் சேரக்கூடிய அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நாளை மறுதினம் (வியாழக்கிழமை) கலந்தாய்வு நடக்க இருக்கிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு அவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படுகிறது. அந்த இடங்களில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் பொருளாதார சூழ்நிலையை கருத்தில்கொண்டு, இந்த ஆண்டும் அவர்களுக்கான மருத்துவம் சார்ந்த பாடங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இடங்கள் அதிகரித்தாலும், விண்ணப்பங்கள் குறைகின்றன
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22 ஆயிரத்து 736 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 ஆயிரத்து 470 விண்ணப்பங்களும் பெறப்பட்டிருந்தன. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, விண்ணப்பப்பதிவு குறைவாகவே இருப்பது மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. கடந்த 2020-21-ம் கல்வியாண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 23 ஆயிரத்து 971 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 14 ஆயிரத்து 6 விண்ணப்பங்களும், 2021-22-ம் கல்வியாண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 24 ஆயிரத்து 951 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 14 ஆயிரத்து 981 விண்ணப்பங்களும் பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதை வைத்து பார்க்கும்போது, ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பங்கள் குறைந்து வருவது தெரிகிறது.
பொதுவாக இடங்கள் அதிகமாக இருக்கும்போது, அதற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக இருக்கும். ஆனால் மருத்துவப்படிப்பில் அது சற்று எதிர்மறையாகவே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் அதிகரித்துவரும் நிலையிலும், விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.