யாழ்.போதனா முன்பாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் கைதானவர்கள் வேலை செய்த புடவைக்கடைகளை மூட நடவடிக்கை!!
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள இரு ஆடை விற்பனையகத்தில் பணியாற்றும் நால்வர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , குறித்த ஆடை விற்பனை நிலையங்கள் இரண்டினதும் வியாபர அனுமதியினை இரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் எடுத்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள இரண்டு ஆடை விற்பனை நிலையங்களில் வேலை செய்யும் நான்கு பேர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விற்பனை நிலையத்திற்கு அண்மையாக வைத்து நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டன.
இந்நிலையில் வைத்திய சாலைக்கு முன்பாக போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதனை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி யாழ்.மாநகர முதல்வருக்கு கடிதம் அனுப்பியதுடன் , அதன் பிரதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கும் , யாழ்.வர்த்தக சங்கத்திற்கும் அனுப்பி இருந்தார்.
அந்த கடிதத்திற்கு, “பணிப்பாளர் அனுப்பிய கடிதம் கிடைத்தது. விரைவில் அந்த வர்த்தக நிலையங்களின் அனுமதி பாத்திரத்தை இரத்து செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும்” என பணிப்பாளருக்கு மாநகர முதல்வர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.