;
Athirady Tamil News

காங்கிரசை தலைமை ஏற்கத் தயாரான மூத்த, தலைவர்.. யார் இந்த மல்லிகார்ஜூன கார்கே..!!

0

காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். 9 தடவை எம்.எல்.ஏ.ஆகவும், 3 தடவை எம்.பி. ஆகவும் இருந்த சிறப்பு இவருக்கு உண்டு. புத்த மதத்தை பின்பற்றும் கார்கே, மென்மையானவர், அமைதியாக பேசக்கூடியவர், நிதானமானவர், எந்த அரசியல் சர்ச்சையிலும் சிக்காதவர். குல்பர்கா மாவட்டத்தில் உள்ள வார்வாட்டியில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த கார்கே, பி.ஏ., சட்டம் படித்து சிறிது காலம் பயிற்சி செய்தார். பிறகு 1969-ல் காங்கிரசில் சேர்ந்தார்.

கார்கே 1969-ல் தனது சொந்த ஊரான குல்பர்காவின், நகர காங்கிரசின் தலைவராக நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து, மாநில அரசியலில் நீண்ட காலமாக பதவியில் இருந்து வருகிறார். 1972-ம் ஆண்டு முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது தேர்தல் அரசியலில் நுழைந்தார். அதில் அவர் வெற்றி பெற்றார். தொடர்ந்து எட்டு முறை தேர்தலில் வென்று சாதனை செய்தார். 1976-ம் ஆண்டு தேவராஜ் அர்ஸ் அரசில் முதல் முறையாக அமைச்சரானார். 1970-களின் பிற்பகுதியில் இந்திரா காந்தியுடனான மோதலுக்குப் பிறகு தேவராஜ் கட்சியைவிட்டு வெளியேறி காங்கிரசை (யு) இயக்கியபோதுதான் கார்கே கிளர்ச்சிப் போக்கைக் காட்டினார். கார்கே, அரசுடன் சென்றார்.

ஆனால் 1980 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கர்நாடகாவில் அர்ஸ் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் கார்கே காங்கிரசுக்குத் திரும்பினார். 1980-ல் குண்டுராவ், 1990-ல் எஸ்.பங்காரப்பா, 1992 முதல் 1994 வரை எம்.வீரப்ப மொய்லி அரசில் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, அனைத்து காங்கிரஸ் அரசுகளிலும் அமைச்சராக இருந்தார். 1996-99 மற்றும் 2008-09-ல் எதிர்க்கட்சித் தலைவராகவும், 2005-08 முதல் மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். 2009-ல் தேசிய அரசியலுக்குச் செல்வதற்கு முன்பு, அவர் முதல் முறையாக மக்களவையில் நுழைந்தார்.

மன்மோகன் சிங் அமைச்சரவையில், முதலில் தொழிலாளர் அமைச்சராகவும், பின்னர் ரெயில்வே மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இலாகாவும் கார்கேவுக்கு வழங்கப்பட்டது. 2014-ல் காங்கிரஸ் அவமானகரமான தோல்வியைச் சந்தித்து மக்களவையில் வெறும் 44 உறுப்பினர்களாகக் குறைக்கப்பட்டபோது கார்கேவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. குல்பர்கா தொகுதியில் 2-வது முறையாக வெற்றி பெற்ற கார்கே, மக்களவையில் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது மகாபாரதத்தை எடுத்துரைத்து, கார்கே பேசுகையில், லோக்சபாவில் நாம் 44-ஆக இருக்கலாம், ஆனால் நூறு கவுரவர்களால் பாண்டவர்கள் ஒருபோதும் பயப்பட மாட்டார்கள் என்றார்.

அதன்பிறகு லோக்சபாவில் ஐந்து ஆண்டுகள் கட்சிக்கு உத்வேகத்தை அளித்தார். 2019-ம் ஆண்டில், அவரது தேர்தல் வாழ்க்கையில் முதல்முறையாக, கார்கே தோல்வியை ருசித்தபோது, கட்சி அவரை ராஜ்யசபாவிற்கு கொண்டு வந்து விசுவாசமான மூத்த தலைவருக்கு வெகுமதி அளித்தது. மேலும், அவரது திறமையை அங்கீகரிப்பதற்காக, பிப்ரவரி 2021- ல் அவரை மேல்சபையின் எதிர்க்கட்சித் தலைவராக்கியது. இந்தியில் சரளமாகப் பேசக்கூடிய கார்கே, சுதந்திரத்திற்குப் பிறகு தெற்கில் இருந்து காங்கிரஸ் தலைவராக பதவியேற்கும் ஆறாவது தலைவர் ஆவார்.

பி.பட்டாபி சீதாராமையா, என்.சஞ்சீவ ரெட்டி, கே.காமராஜ், எஸ்.நிஜலிங்கப்பா மற்றும் பி.வி.நரசிம்மராவ் ஆகியோர் தெற்கில் இருந்து வந்த மற்ற தலைவர்கள். குறிப்பாக மிக முக்கியமாக, இரண்டரை தசாப்தங்களுக்கு பிறகு காந்தி குடும்பத்திற்கு வெளியே, கட்சியை வழிநடத்தும் முதல் நபர் மல்லிகார்ஜூன கார்கே ஆவார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.