ராமநவமியின் போது வன்முறையில் ஈடுபட்டதாக 12 வயது சிறுவனுக்கு நோட்டீசு அனுப்பிய போலீசார்..!!
மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்த ராமநவமி கொண்டாட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டது. அப்போது நடந்த மோதலில் பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. மத்திய பிரதேசத்தில் போராட்டங்களின் போது பொது சொத்துக்களை சேதப்படுத்துவோரிடம் இருந்து அதற்கான நஷ்டஈட்டை அந்த அமைப்பினரே வழங்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி ராமநவமியின் போது நடந்த வன்முறையில் சேதப்படுத்தப்பட்ட பொது சொத்துக்களுக்கு ரூ.2.9 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கர்கோன் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில் வன்முறையின் போது சேதப்படுத்தப்பட்ட பொருள்களுக்கு நஷ்டஈடாக ரூ.2.9 லட்சம் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்து. இதனை கண்டு சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சிறுவனை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் உள்ளனர். மேலும் சிறுவனின் பெற்றோர் மத்திய பிரதேச ஐகோர்ட்டில் மனு செய்தனர். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு தீர்ப்பாயத்தில் மனு செய்து தீர்வு காணும்படி கூறியுள்ளது. இது மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.