பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றேன் :- ஜனாதிபதி!!
இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். இன்று (20) முற்பகல் ஹெவ்லொக் சிட்டி, மிரேகா டவர் வர்த்தக மற்றும் அலுவலக கட்டிடத் தொகுதி ((Mireka Tower) திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முதலீட்டுக்காக பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட கட்டமைப்புகளை மீண்டும் செயற்படுத்தி தற்போதைய மெதுவான செயற்பாடுகளுக்குப் பதிலாக செயற்திறன்மிக்க சட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதற்காக ஆணைக்குழுவொன்றை தான் நியமித்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதன் கீழ் முதலீட்டுச் சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனம் என்பவற்றை இணைக்கும் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையின் மூலம், இலங்கைக்கு புதிய வெளிநாட்டு முதலீடுகள் வர ஆரம்பிக்கும் எனவும் இதன் மூலம் கிடைக்கும் அதிக வருமானத்துடன், வெளிநாட்டுக் கடன் பெறும் தீய சுழற்சியில் இருந்து இலங்கை வெளியேற முடியும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்,
திருவாளர் எஸ்.பி டாவோ அவர்கள் இலங்கை மீது கொண்டிருந்த அர்ப்பணிப்பின் நினைவுச் சின்னமாகவே ஹெவலொக் சிட்டி கட்டடம் விளங்குகின்றது. 1994 ஆம் ஆண்டு நான் பிரதமராக இருந்தபோதே முதன்முதலாக டாவோவை சந்தித்தேன். அப்போது அவர் உலக வர்த்தக மையத்துக்கான பணிகளை ஆரம்பித்திருந்தார்.முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச காலமானதன் பின்னர், மறைந்த சிறிசேன குரே, என்னை சந்திப்பதற்காக அவரை அழைத்து வந்திருந்தார். அவ்வாறு தான் எனக்கும் டாவோ அவர்களுக்குமான தொடர்பு ஆரம்பித்தது. நான் அவரை பல தடவைகள் சந்தித்துள்ளேன். அவரை மட்டுமன்றி மில்ரட் டாவோவையும் நான் சந்தித்துள்ளேன்.
எல்.ரீ.ரீ.ஈ நடத்திய தாக்குதலையடுத்து அவர்கள் இங்கிருந்து செல்வார்கள் என பலரும் நினைத்தார்கள். இது தொடர்பில் நான் கேட்டபோதும் கூட தான் இங்கேயே இருக்கப்போவதாகவே டாவோ கூறினார். இலங்கையின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்தமைக்காக முதலில் அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். 2003 ஆம் ஆண்டு நான் அவரை சந்தித்தபோதுகூட தனக்கு புதிய செயற்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டுமென எஸ்.பி டாவோ என்னிடம் கூறினார்.
அதற்கமைய அப்புதிய செயற்திட்டமானது வெள்ளவத்தையில் ஹெவலொக் டவுனில் கைவிடப்பட்டிருந்த காணியில் உருவானது. அந்த காணியில் கைத்தொழில் கருத்திட்டமொன்றை ஆரம்பிக்கலாமே என அப்போது பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.எனினும் அப்பகுதி குடியிருப்பாளர்கள் அதிகமுள்ள பிரதேசமாக மாறியிருப்பதனால் ஹெவலொக் சிட்டியுடன் அங்கே பாரிய அபிவிருத்தி ஏற்படுமென நான் கூறினேன்.
வெள்ளவத்தையிலுள்ள குறித்த பிரதேசத்தில் துணி தொழிற்சாலை செயற்பாடுகள் மற்றும் நெசவு ஆலைகள் இயங்குவதை நான் சிறுவனாக இருக்கும்போது அறிந்திருந்தேன். சொலி கெப்டனுடைய அப்பா, திரு.கெப்டன் அவர்கள் இந்த ஆலைகளுக்கு பொறுப்பாக இருந்த சந்தர்ப்பத்தில் நான் இங்கே வந்துள்ளேன். அப்போது நாங்கள் இங்கே மதிய உணவு உட்கொண்டதன் பின்னர் ஆலைகளைப் பார்வையிடுவோம்.
1975 ஆம் ஆண்டில் நான் அரசியலுக்கு வந்த சந்தர்ப்பத்தில் அப்போதைய ஜனாதிபதியான ஜே.ஆர் ஜயவர்தனவே கொழும்பு தெற்கிற்குப் பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது தேர்தல் தொகுதியாக இருந்த வெள்ளவத்தை வடக்கை பொறுப்பேற்குமாறு என்னிடம் தெரிவித்தார். எனவே நான் இங்கே அடிக்கடி வருவதுண்டு. கைத்தொழிற்சாலை விடுதிக் கட்டிடத்திலேயே சில கூட்டங்கள் நடத்தப்பட்டன. நீங்கள் என்ன செய்தாலும் அங்கே வேலையாட்களை நன்றாகக் கவனித்துக் கொள்ளுமாறு நான் எஸ்.பி டாவோவிடம் கூறினேன். அவரும் அவ்வாறே செய்தார்.
அந்தவகையில் முதன்முதலாக நான் பொறுப்பேற்ற இப்பிரதேசத்தைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதுமட்டுமன்றி இதனைத் தொடர்ந்து நான் பியகமவைப் பொறுப்பேற்று அங்கும் சுதந்திர வர்த்தக வலையங்களை ஆரம்பித்தேன்.
ஹெவலொக் டவுனில் ஏன் இதுபோன்றதொரு திட்டத்தை ஆரம்பிக்க கூடாது என்று நான் சிந்தித்தேன். அதனை முன்னெடுக்க எஸ்.பி டாவோவைவிட மிகச் சிறந்த நபர் இருக்க முடியாது என்று நான் கருதினேன். அதன் விளைவாகவே நாம் இன்று இந்தக் கட்டிடத்தை பார்க்க முடிந்துள்ளது. இதில் பலர் தொடர்புபட்டுள்ளார்கள். அதில் ஒருவரே ரோஹினி நாணயக்கார. அவர் இச்செயற்திட்டத்தில் ஆரம்பம் முதலே தொடர்புகளைக் கொண்டுள்ளார்.
அஜித் ஜயரட்ன உள்ளிட்ட மேலும் பலர் இச்செயற்திட்டத்துடன் தொடர்புகளைக் கொண்டுள்ளனர். இதற்காக நான் மீண்டும் அவர்களுக்கு நன்றிகளைக் கூறிக்கொள்கின்றேன். எனினும் எஸ்.பி டாவோ இங்கே இல்லாமைக்காக நான் மிகவும் மனம் வருந்துகின்றேன். எவ்வாறாயினும் இதனை அவருக்கான அஞ்சலியாகவே சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
நான் இன்னுமொரு முதலீட்டையும் எதிர்பார்க்கிறேன். அது மில்ட்ரடின் முதலீடாக இருக்க வேண்டும்.நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! இது உங்களின் முதலீடு அல்ல. இது எஸ்.பி டாவோவின் முதலீடு என்பதனால் மில்ட்ரடின் ஒரு முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும்.
எவ்வாறாயினும் நாம் தற்போது வெளிநாட்டு முதலீடு தொடர்பில் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். வெளிநாட்டுக் கடன்களை எமது பிரதான வருமானமாக மாற்ற வேண்டும்.
ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார நாடாக நாம் மாற வேண்டும். அதேபோல நாம் எமது வெளிநாட்டு முதலீட்டையும் அதிகரிக்க வேண்டும். தற்போது, வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்க வேண்டுமாக இருந்தால், எமது பொருளாதாரத் தொடர்புகளை நாட்டுக்கு வெளியில் தேட வேண்டும்.எமது பொருளாதாரத்தை நாட்டுக்குள்ளே தேடிக் கொண்டிருக்க முடியாது. அதனடிப்படையில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட ஆரம்பித்துள்ளது. எமது கடனை எவ்வாறு மறுசீரமைப்பது என்பது தொடர்பில் பிரதான கடன் வழங்குனரான ஜப்பான்,சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மீண்டும் வேகமான பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். முதலீடு தொடர்பில் பல அரசாங்க முகவர் நிலையங்கள் காணப்படுவது எமக்குள்ள மிகப் பெரிய பிரச்சினையாகும்.
நீங்கள் முதலீட்டு ஊக்குவிப்புச் சபை, சுற்றுலாச் சபை, மேலும் சில அமைச்சுக்களுக்குச் சென்றதன் பின்னரே உங்களால் துறைமுக நகரை அடைய முடியும். பின்னர் மீண்டும் நீங்கள் எங்கிருந்து ஆரம்பித்தீர்களோ அங்கிருந்து இரண்டாவதுச் சுற்றை ஆரம்பிப்பீர்கள். சுமார் பத்து வருடங்களுக்குப் பின்னரே நீங்கள் உங்கள் முதலீட்டை முழுமையாக அடைவீர்கள். இவ்வாறு பணியாற்ற முடியாது.
1977 ஆம் ஆண்டில் நாம் பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழுவை ஆரம்பித்தோம். அதில் தீர்மானங்கள் வெகு விரைவாக முன்னெடுக்கப்பட்டன. அதன் விளைவாக சுமார் பத்து வருடங்களுக்குள் கட்டுநாயக்க, பியகம, கொக்கலை மற்றும் சீதாவக்க ஆகிய நான்கு முதலீட்டு வலயங்களை ஆரம்பித்தோம். அதேபோல பல்லேகலையில் வலயமொன்றை முன்னெடுக்க திரு விஜேதுங்க விரும்பினார்.
சுற்றலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே, முதற்பணியாக முதலீட்டுக்கான அதிகாரிகள் உள்ளிட்ட முழுமையான கட்டமைப்பை மீளப் பரிசீலிப்பதற்காக நான் குழுவொன்றை நியமித்தேன்.
இந்த குழுவானது முதலீட்டு ஊக்குவிப்புச் சபை (BOI), ஏற்றுமதி அபிவிருத்தி வங்கி( EDB) மற்றும் இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுதாபனம் (SLECIC) ஆகிய மூன்றையும் ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு முகவர் அமைப்பாக கொண்டுவருவதற்கான பணிகளை முன்னெடுப்பதுடன் அதற்கான சிபாரிசுகளும் முன்வைக்கப்படுகிறது.
கைத்தொழில் துறைகளும் முதலீட்டு வலயங்களும் வீழ்ச்சியடையவுள்ளன. கட்டுநாயக்கவும் பியகமவுமே தெற்காசியாவிலுள்ள மிகச்சிறந்த வலயங்களென நான் நினைக்கின்றேன். பிங்கிரியவில் ஆயிரம் ஏக்கர் கொண்ட வலயத்தை ஸ்தாபிக்க இருக்கிறோம். அதேபோன்று ஹம்பாந்தோட்டை, திருகோணமலை ஆகிய பிரதேசங்கள் குறித்தும் கவனம் செலுத்தி வருகின்றோம்.
அதனைத் தொடர்ந்து, தற்போது நம்மிடமுள்ள சட்டங்களை, பாரிய கொழும்பு ஆணைக்குழுவுக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும். அப்போதே முதலீடு ஒன்று வந்தால் இரண்டு வாரங்களில் குறித்த கட்டமைப்பினால் அது தொடர்பான தீர்மானத்தை எடுக்கக்கூடியதாக இருக்கும்.
அதனைத் தொடர்ந்து மனித வளங்களின் தரம் மற்றும் கிடைக்கும் ஆள் பலம் மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். முதலீடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்பதை உறுதிசெய்வதற்கு எமக்கு மிகவும் திறமையான அதிகாரிகளின் கட்டமைப்பு மற்றும் மிகச் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அப்படியாக இருந்தால் அது உற்பத்தி,தொழில்நுட்பம்,சுற்றுலாத்துறை என எதுவாக இருந்தாலும் எம்மால் இந்த வலயங்கள் தொடர்பில் மட்டும் கவனத்தைச் செலுத்தக்கூடியதாக இருக்கும்.
பாரிய கொழும்பு பொருளாதார முறைமையின் கீழ் ஒரு ஒழுங்கு முறை இருந்ததனால் எம்மால் வேலைகளை விரைவாக முன்னெடுக்கக் கூடியதாக இருந்தது.
எனவே இப்புதிய முறையை நடைமுறைப்படுத்துவதற்கே நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்காக பல சட்டங்கள் மாற்றியமைக்கப்படும். இவ்வாறு செய்து நாம் நாட்டை ஏமாற்றுவதாகக் கூறி சிலர் சத்தம் போடுவார்கள். எது எவ்வாறாயினும் எமக்கு துரித வளர்ச்சி அவசியம்.ஏற்கனவே நாம் வீழ்ச்சியடைந்துள்ளோம். அதற்காக நாம் வீழ்ந்தே கிடக்க வேண்டும் என்பதில்லை.
இலங்கை ஒரு உதைப்பந்தாக இருக்குமாயின் நீங்கள் கீழ் நோக்கி அடித்தாலும் அது மேலே எழும். எனவே நாம் அதுவாகவே இருக்க வேண்டும். நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாற்றும் அதே வேளை கல்வியை நவீனமயப்படுத்தியும் வருகின்றோம்.
பொருளாதாரத்தை நவீனமயப்படுத்துவது தொடர்பிலும் நாம் ஆராய்ந்து வருகின்றோம். கைத்தொழிற் துறையை அடிப்படையாகக் கொண்டு தற்போது எமது கவனம் நவீன விவசாயத்தின் பக்கம் திரும்பியுள்ளது. எம்மிடம் அதற்கு தேவையான அளவு காணிகள் உள்ளன. பொருளியல் ரீதியான சட்டங்களை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் நாம் ஆரம்பித்துள்ளோம்.
இவற்றை செய்வதன் மூலம் இலங்கையை முதலீட்டுக்கு ஏற்றதொரு நட்பு நாடாக மாற்றுவதே எமது எதிர்பார்ப்பாகும். நாட்டுக்கு முதலீடுகள் வந்தால் எமக்கு அதிக தொழில்வாய்ப்புகள், உயர் வருமானம் என்பவற்றை பெறுவதுடன் வெளிநாட்டுக் கடன்கள் எனும் தீய சுழற்சியிலிருந்தும் எம்மால் விடுபட முடியும். இதை இரண்டாவது தடவையாகவும் எம்மால் செய்ய முடியாது. எனவே நாம் வெளிநாட்டு முதலீட்டைப் பெறுவதனை மேலும் மேலும் ஊக்குவிக்க வேண்டும்.
எஸ்.பி டாவோ இலங்கை மீது அதிக நம்பிக்கையை வைத்திருந்தார். சீனா அல்லது இந்தியாவைப் பார்க்கிலும் மிகச் சிறந்த இடமாக இலங்கையை அடையாளங் கண்டு முதலீடுகளை ஆரம்பித்தார். கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க, ஹெவலக் சிட்டி லிமிடட் தலைவர் அஜித் ஜயரத்ன, பணிப்பாளர் மில்ரட் டாமி உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டார்கள்.