காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து- ராகுல் காந்தி வாக்குறுதி..!!
ராகுல் காந்தி தேசிய ஒற்றுமை பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர் தற்போது ஆந்திராவில் நடைபயணம் செய்து வருகிறார். கர்னூல் மாவட்டம் அதோனிக்கு நேற்று வந்தார். காங்கிரஸ் தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் அங்குள்ள மகாலட்சுமி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார். பல்வேறு கிராமங்கள் வழியாக ராகுல் காந்தி நடந்து சென்றார். அப்போது பொதுமக்கள் அவரை வரவேற்றனர். அப்போது ராகுல் காந்தி அளித்த பேட்டியில் கூறியதாவது:- நாட்டில் ஒற்றுமை நிலவ வேண்டியே இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. ஆந்திர மாநில பிரிவினையின்போது காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். போலவரம் அணை பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். ஆந்திராவில் 3 தலைநகர்கள் திட்டத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது. அமராவதி ஒன்றே ஆந்திராவின் தலைநகராகும். இவ்வாறு அவர் கூறினார். இன்று 3-வது நாளாக ஆந்திராவில் ராகுல்காந்தி நடைபயணம் சென்றார். அவரை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பலர் ராகுல் காந்தியுடன் செல்பி எடுத்து ஆரவாரம் செய்தனர்.