திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் 24-ந்தேதி நடக்கிறது..!!
தீபாவளி பண்டிகையையொட்டி 24-ந்தேதி காலை 7 மணியில் இருந்து காலை 9 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க வாசல் எதிரில் காண்ட மண்டபத்தில் தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது. ஆஸ்தானத்தின் ஒரு பகுதியாகக் காண்ட மண்டபத்தில் அமைக்கப்படும் சர்வபூபால வாகனத்தில் கருடாழ்வாரை நோக்கி உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை கொண்டு வந்து வைக்கிறார்கள். இவர்களுடன் சேனாதிபதியான விஸ்வக்சேனரையும் கொண்டு வந்து மலையப்பசாமியின் இடப்பக்கத்தில் மற்றொரு பீடத்தில் தெற்கு நோக்கி வைக்கிறார்கள். அதன்பிறகு மூலவர்களுக்கும், உற்சவர்களுக்கும் சிறப்புப்பூஜைகள், ஆரத்தி, பிரசாத நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. இத்துடன் தீபாவளி ஆஸ்தானம் நிறைவு பெறுகிறது. அதைத்தொடர்ந்து மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சஹஸ்ர தீபாலங்கார சேவையில் பங்கேற்று கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். தீபாவளி ஆஸ்தானத்தால் கோவிலில் 24-ந்தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகிய ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.