முஸ்லிம்கள் லட்சுமியை வணங்குவதில்லை.. ஆனால் அவர்கள் பணக்காரர்களாக இல்லையா? பாஜக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை..!!
பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள பிர்பைண்டி பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ லாலன் பாஸ்வான், இந்து தெய்வங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில், முஸ்லிம்கள் லட்சுமியை வழிபடுவதில்லை. அதனால், அவர்கள் பணக்காரர்கள் இல்லையா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர், “ஆத்மா மற்றும் பரமாத்மா என்பது மக்களின் நம்பிக்கை மட்டுமே. நீங்கள் நம்பினால் அது தெய்வம். இல்லை என்றால் அது வெறும் கற்சிலை. கடவுள், தெய்வங்களை நம்புகிறோமா இல்லையா என்பது நம் கையில் தான் உள்ளது. அதை அடைய அறிவியல் அடிப்படையில் சிந்திக்க வேண்டும். தர்க்கரீதியான முடிவு, நீங்கள் நம்புவதை நிறுத்தினால், உங்கள் அறிவுத்திறன் அதிகரிக்கும். பஜ்ரங்பாலி (ஆஞ்சநேயர்) சக்தி கொண்ட தெய்வம் மற்றும் வலிமையை அளிக்கிறது என்று நம்பப்படுகிறது. இஸ்லாமியர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ பஜ்ரங்பாலியை வணங்குவதில்லை. அவர்கள் சக்தி வாய்ந்தவர்கள் இல்லையா? நீங்கள் நம்புவதை நிறுத்தும் நாளில் இவை அனைத்தும் முடிவுக்கு வரும்” என்று கூறினார். பாஸ்வானின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பிறகு எம்.எல்.ஏ.வுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.