சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதியில் 3 நாட்கள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 24-ம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. மறுநாள் 25-ந்தேதி, சூரிய கிரகணத்தை முன்னிட்டு காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட உள்ளது.
எனவே இந்த 2 நாட்களும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 8-ந் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்று காலை முதல், மாலை 7.30 மணி வரை 12 மணி நேரம் கோவில் நடை அடைக்கப்படுகிறது. எனவே அன்றும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ரூ.300 சிறப்பு தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் திருப்பதிக்கு வருவதை திட்டமிட வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்தில் அங்கபிரதட்சனம் செய்வதற்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. மேலும், டிசம்பர் மாதத்திற்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த டிக்கெட்டுகள் முதலில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. திருப்பதியில் நேற்று 72,243 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 32,652 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.