;
Athirady Tamil News

வங்க கடலில் புதிய புயல்: தமிழகத்தில் 4 நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு- கடலோர மாவட்டங்களில் உஷார் நிலை..!!

0

தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானது. இந்த வளி மண்டல சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றுள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 7.6 கி.மீ தூரம் வரை பரந்து விரிந்துள்ளது. வங்கக்கடலில் தென் கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய பகுதியில் உருவாகி உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடக்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்கிறது. அது நாளை மறுநாள் (சனிக் கிழமை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. அது மத்திய வங்கக்கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும்.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேலும் வலுவடைந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் வருகிற 23-ந்தேதி புயலாக வலுவடைய உள்ளது. இந்த புயலுக்கு தாய்லாந்து நாட்டால் பரிந்துரைக்கப்பட்ட ‘சிட்ரங்’ என்ற பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த புயல் வடக்கு ஆந்திர கடலோர பகுதியை முதலில் தாக்கும். வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த புயல் வடக்கு ஆந்திர கடலோர பகுதியை முதலில் தாக்கும். மேலும் புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாகே, கர்நாடகாவின் தெற்கு பகுதிகள் மற்றும் லட்சத்தீவு ஆகிய இடங்களிலும் பரவலான மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சில இடங்களில் கன மழையும், மற்ற இடங்களில் பரவலான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய புயல் உருவாவதை தொடர்ந்து பல கடலோர மாவட்டங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. பொது மக்கள் முன் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயல் முன்அறிவிப்பை கருத்தில் கொண்டு ஒடிசா அரசு தனது ஊழியர்களின் விடுமுறையை வருகிற 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ரத்து செய்துள்ளது. இந்த புயலின் பாதை ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதியை நோக்கி இருக்கும் என்பதால் ஆந்திரா மற்றும் ஒடிசாவில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஒடிசா அரசு 7 கடலோர மாவட்டங்களின் நிர்வாகங்களை உஷார்படுத்தி உள்ளது. புயல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் கஞ்சம்பூரி, குர்தா, ஜெகத்சிங்பூர், கேந்திரபடா, பத்ரக் மற்றும் பாலசோர் ஆகிய மாவட்டங்களை புயல் தாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே அங்கு அதிகாரிகள் மிகவும் உஷாராக இருக்கவும், நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வருகிற 23-ந்தேதி பூரி, கேந்திரபடா மற்றும் ஜெகந்த் சிங்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் ஒடிசாவின் கடலோர பகுதியில் மழையின் தீவிரம், புயலின் பாதை, காற்றின் வேகம் ஆகியவை இன்னும் கணிக்கப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.