போக்குவரத்து விதி மீறல்: அபராத தொகை பல மடங்கு உயர்வு – தமிழகத்தில் உடனடியாக அமலுக்கு வந்தது..!!
போக்குவரத்துவிதிகளை மீறுவதால் விபத்துகள் நேரிட்டு நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.இதை கட்டுப்படுத்த சாலை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
அபராத தொகை உயர்வு
போக்குவரத்து விதிகளை பள்ளிக்குழந்தைகளும் தெரிந்து கொள்ளும் வகையில் அரசு பாடத்திட்டங்களை இயற்றி வருகிறது. எவ்வளவோ பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தாலும், போக்குவரத்து விதிகளை பெரும்பாலானோர் மீறிக்கொண்டுதான் இருக்கின்றனர். சிறிய விதிமீறல் பெரிய இழப்புகளுக்கு காரணமாகிவிடுகிறது. எனவே அபராதத் தொகையை அதிகரித்தால் மட்டுமே விபத்துகளை குறைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்து மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதத் தொகை பன்மடங்கு உயர்த்தப்பட்டது.
தமிழக அரசு முடிவு
இதுகுறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
போக்குவரத்தில் விதிகளை மீறினால், அதற்காக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் தண்டனை விவரங்களை அவ்வப்போது அரசு அறிவித்து வருகிறது. தற்போது போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதைத் தொடர்ந்து விபத்துகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது.
எனவே போக்குவரத்து விதி மீறலைத் தடுக்கும் வகையில் அபராதத் தொகை உயர்த்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் அபராதத் தொகையை உயர்த்தி மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்திருந்தது. இதுதொடர்பாக அரசுக்கு போக்குவரத்து ஆணையர் கடிதம் எழுதியிருந்தார். அதில், மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள திருத்தங்களின்படி அபராதம் விதிக்கலாம் என்றும் எலக்ட்ரானிக் மூலம் அபராதத் தொகையை அமலாக்க அதிகாரிகள் மூலம் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
போக்குவரத்து போலீசார் உள்பட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு குறைவில்லாத போலீஸ் அதிகாரிகள் அபராதத்தை வசூலிக்கலாம் என்று ஆணையர் கூறியுள்ளார். அவரது கருத்துகளை அரசு கவனமுடன் பரிசீலித்து திருத்தப்பட்ட அபராதத் தொகையை வசூலிக்க முடிவு செய்துள்ளது.
வாகன பதிவு
அதன்படி, மோட்டார் வாகன பதிவை புதுப்பிக்கத் தவறும் பட்சத்தில் அபராதம் ரூ.500 வசூலிக்கப்படும். மீண்டும் அந்தத் தவறை செய்தால் ரூ.1,500 அபராதம் வசூலிக்கப்படும். வேறு மாநிலத்தில் இருந்து கொண்டு வந்த மோட்டார் வாகனத்தின் மறுபதிவுக்கு 12 மாதங்களுக்குள் விண்ணப்பிக்காவிட்டால் ரூ.500 அபராதம்.
மறுபடியும் அதே தவறுக்கு ரூ.1,500 அபராதம். மேலும், வாகன உரிமையாளர் மாறினால் அதுபற்றிய பதிவை குறித்த காலத்திற்குள் செய்யாவிட்டாலும்; பொது இடங்களில் வாகனங்களை அபாயமான நிலையில் விட்டுச் சென்றாலும்; பயணியை வாகனத்தின் இருக்கையில் அல்லாமல் வெளிப்பகுதியில் இருக்கும் நிலையில் அழைத்துச் சென்றாலும்; ஓட்டுநரின் கட்டுப்பாடு தவறும் அளவில் இடையூறாக அமர்ந்தாலோ; அதிகாரிகள் கேட்கும்போது வாகனத்துக்கான ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை கொடுக்காவிட்டாலும் முதலில் ரூ.500-ம், மறுபடி தவறு செய்தால் ரூ.1,500-ம் அபராதமாக வசூலிக்கப்படும்.
பஸ் பயணத்தில்…
பஸ்களில் டிக்கெட், பாஸ் இல்லாமல் பயணித்தாலும், அவற்றை சோதனையின்போது காட்டாவிட்டாலும்; பயணிகளை அழைத்துச் செல்ல மறுத்தாலும் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். அதிகாரிகளிடம் தகவல்களைக் கொடுத்த மறுத்தாலும்; தவறான தகவல்களை அளித்தாலும் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். அங்கீகரிக்கப்படாத நபரை வாகனத்தை இயக்கச் செய்தாலும்; ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டினாலும் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் தொடர்பான குற்றங்களுக்காக (வாகனத்தை, ஓட்டுநர் உரிமத்தை வைக்க தகுதி இழப்பு செய்யப்பட்டவர் இயக்குவது, உரிமத்தை இழந்த தகவலை தெரிவிக்காமல் உரிமம் பெற விண்ணப்பித்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். (நடத்துநர் உரிமத்திற்கும் இது பொருந்தும்).
அதிவேகமாக ஓட்டினால்…
வாகன தயாரிப்பாளர், இறக்குமதியாளர் அல்லது டீலர் யாராவது வாகன அளவீடுகளை அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு மாறாக மாற்றி அமைத்தாலும்; வாகனத்தின் மிகமுக்கிய பாகம் என்றுஅங்கீகரிக்கப்பட்ட பாகத்தை விற்பனை செய்ய முயன்றாலும் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்படும்.
சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அளவீடுகளுக்கு மாறாக வாகனத்தை அதன் உரிமையாளர் மாற்றி அமைத்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்; இலகுரக வாகனத்தை நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைவிட கூடுதல் வேகமாக செலுத்தினால் ஆயிரம் ரூபாய்; நடுத்தர அல்லது கனரக வாகனத்தை வேகமாக ஓட்டினால் ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படும். அதிவேகமாக கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டினாலும், கையில் தொலை தொடர்பு சாதனத்தை வைத்து ஓட்டினாலும் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். இந்தத் தவறை மீண்டும் செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும்.
பெர்மிட் விதிகள்
உடல் மற்றும் மனநிலை பொருத்தமில்லாத நிலையில் வாகனத்தை ஓட்டினால் ஆயிரம் ரூபாய்; மீண்டும் செய்தால் ரூ.2 ஆயிரம் அபராதம். பொது இடங்களில் அனுமதி பெறாமல் ரேசுக்கான வாகனம் ஓட்டுவது, வேக சோதனை நடத்துவதற்கு ரூ.5 ஆயிரம் அபராதம்; மீண்டும் செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம். சாலை பாதுகாப்புக்காக நிர்ணயிக்கப்பட்ட விதிகளை மீறி வாகனம் ஓட்டுவது அல்லது ஓட்டச் செய்வதற்கு (காற்று அல்லது ஒலி மாசு) ரூ.10 ஆயிரம் அபராதம்; மறுபடியும் செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். பதிவு பெறாமல் வாகனத்தை ஓட்டினால் ரூ.2,500; மறுபடியும் அதே தவறை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். பெர்மிட் விதிகளை மீறி போக்குவரத்து வாகனமாக ஏதாவது ஒரு வாகனத்தை ஓட்டினால் அல்லது ஓட்டச் செய்தால் ரூ.10 ஆயிரம்; மீண்டும் செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம்.
அளவைத் தாண்டி…
அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக எடையை கொண்டு சென்றால் ரூ.20 ஆயிரம் அபராதம், (தலா ஒரு டன்னுக்கு ரூ.2 ஆயிரம் கூடுதலாக வசூலிக்கப்படும்). வாகனத்தை நிறுத்த மறுத்தாலோ, வாகன எடையை சோதனை செய்ய மறுப்பு தெரிவித்தாலோ, அதிக எடையை குறைக்க மறுத்தாலோ ரூ.40 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்டபடி, வாகனத்தின் அளவைத் தாண்டி, வெளியே தெரியும்படி முன்னும், பின்னும், மேலாகவும், எடையை கொண்டு சென்றால் ரூ.20 ஆயிரம் அபராதம். அனுமதிக்கப்பட்ட சீட் எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் போக்குவரத்து வாகனத்திற்கு, ஒரு பயணிக்கு ரூ.200 என்ற வகையில் அதிலுள்ள கூடுதல் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அபராதம் வசூலிக்கப்படும்.
பாதுகாப்பு பெல்ட்
பாதுகாப்பு பெல்ட் அணியாமல் வாகனத்தை ஓட்டினாலும், அதில் பயணிக்கும் பயணி பாதுகாப்பு பெல்ட் அணியாமல் இருந்தாலோ ஆயிரம் ரூபாய் அபராதம். 14 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பு பெல்ட் அணியாமலும் அல்லது குழந்தையை பாதுகாக்கும் முறைகள் இல்லாமலும் வாகனத்தை ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். மோட்டார் வாகனத்தில் அளவுக்கு அதிகமாக ஆட்களை அழைத்துச் சென்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றாலோ, அவர் பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் அணியாமல் இருந்தாலோ ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும்.
ஆம்புலன்சுக்கு வழிவிடாமல்…
ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற அவசர வாகனங்கள் செல்லும்போது வாகனத்தை சாலையோரம் ஒதுக்கி அவற்றுக்கு வழிவிடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். தேவையில்லாமல் ஹார்ன் அடிப்பது, தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஹார்ன் அடிப்பது, சைலன்சர் தவிர வாகனத்தின் வேறு வழியாக புகை வரும் வாகனங்களை ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். மறுபடியும் அதே தவறைச் செய்தால் ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படும்.
காப்பீடு
காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டினால் ரூ.2 ஆயிரமும், மீண்டும் அந்தத் தவறைச் செய்தால் ரூ.4 ஆயிரமும் வசூலிக்கப்படும். மோட்டார் வாகனத்தில் அங்கீகரிக்கப்படாத திருத்தங்களை செய்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். இம்மாதம் 20-ந் தேதியில் இருந்து (நேற்று) இந்த அறிவிப்பாணை அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.