கடந்த ஆண்டு, அதிக வெயில் காரணமாக இந்தியாவுக்கு ரூ.13 லட்சம் கோடி இழப்பு..!!
சர்வதேச அமைப்புகள் இணைந்து, ‘பருவநிலை அறிக்கை-2022’ வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த ஆண்டு நிலவிய மிதமிஞ்சிய வெயில் காரணமாக, இந்தியாவில் சேைவ, உற்பத்தி, வேளாண்மை, கட்டுமானம் போன்ற முக்கிய துறைகளில் 159 பில்லியன் டாலர் (ரூ.13 லட்சத்து 3 ஆயிரம் கோடி) வருவாய் இழப்பு ஏற்பட்டது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 சதவீதம் ஆகும். அதிகமான வெயிலால் 16 ஆயிரத்து 700 தொழிலாளர் பணி நேரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. உலகளாவிய வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், இந்தியாவில் தொழிலாளர் உற்பத்தி திறன் 5 சதவீத வீழ்ச்சியை சந்திக்கும். உலகளாவிய வெப்பநிலை 2.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், தொழிலாளர் உற்பத்தி திறன் வீழ்ச்சி இரு மடங்காக அதிகரிக்கும். 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், வீழ்ச்சி 2.7 மடங்காக இருக்கும். 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டுவரை புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் 3 கோடியே 60 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பயிர்கள் சேதம் அடைந்தன. அதனால், விவசாயிகளுக்கு 375 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டது. வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், மழைப்பொழிவு 6 சதவீதம் அதிகரிக்கும். 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்தால், மழைப்பொழிவு 3 மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.