13ஐ அடியோடு ஒழிக்க வேண்டும்!!
இந்த நாடு பௌத்த நாடாக இருக்கும் வரையில் மட்டுமே ஏனைய இனத்தவர்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும். எனினும் வடக்கு கிழக்கு அதனை கடைப்பிடிப்பதில்லை, இதற்கு 13 ஆம் திருத்தச் சட்டமே காரணம் என முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று, அரசியலமைப்பின் 22ஆம் திருத்த சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
அரசியலமைப்பின் 13 ஆம் திருத்த சட்டம் எமக்கு இந்தியாவினால் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட ஒன்றாகும். பாராளுமன்ற உறுப்பினர்களை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நிறுத்திவைத்து, பாதுகாப்பாக அவர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்துவந்து, அவர்களிடம் இராஜினாமா கடிதங்களை பெற்றுக்கொண்டே 13ஆம் திருத்தத்தை நிறைவேற்றினர். ஆகவே இதன் சுயாதீனம், புனிதத்தன்மை குறித்து எம்மத்தியில் கேள்வியே எழுகின்றது எனவும் கூறினார்.
ஐக்கியத்திற்கும், ஒற்றையாட்சிக்கும் வித்தியாசம் தெரியாத பலர் இன்று அது குறித்து கதைத்துக்கொண்டுள்ளனர். பெரிய நாடுகளில் கையாள வேண்டிய பொறிமுறைகளை இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு திணிக்க முடியாது. நாம் சமஸ்டி நாடாக இருக்க முடியாது. 13 ஆம் திருத்தம் எமது கழுத்தை நெறிக்கும் கூர்மையான கத்தியைப்போன்றது. எனவே 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு கொடுப்பது நாட்டின் ஐக்கியத்துக்கு பாரிய அச்சுறுத்தலாகும். பலவீனமான மத்திய அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதையே பிரிவினைவாதிகள் விரும்புகின்றனர். அதற்காகவே 13,17,19 ஆம் திருத்தங்களை கொண்டுவந்தனர். இதனாலேயே இந்த திருத்தங்களை நான் எதிர்த்தேன். ஒற்றையாட்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். புதிய அரசியல் அமைப்பே இதற்கு தீர்வாகும். அதற்காகவே கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மக்கள் ஆணையும் கிடைத்தது. மேலும், 22ஆம் திருத்த சட்டத்துக்கு நான் இணங்க மாட்டேன், இது மக்களின் ஆணைக்குழு முரணானது என்றார்.