;
Athirady Tamil News

இலங்கை கடல் பகுதியில் மீண்டும் ஒரு சீன கப்பல் – என்ன காரணம்?

0

இலங்கையின் மேற்கு பகுதியில் கடந்த ஆண்டு விபத்துள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் பாகங்களை மீட்டெடுப்பதற்காக சீனாவிற்கு சொந்தமான கப்பல் ஒன்று இலங்கை கடற்பரப்பிற்குள் வருகை தந்திருக்கிறது.

இலங்கை கடற்பரப்பின் வழியாக பயணித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் கடந்த ஆண்டு மே மாதம் தீக்கிரையாகி, கடலில் மூழ்கியது. இரசாயன கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த தீ விபத்தினால் இலங்கையின் கடற்பரப்பு பெரிதளவில் பாதிக்கப்பட்டது. கொழும்பு மற்றும் அதனை அண்மித்த கரையோர பகுதிகளில் இரசாயன பொருட்கள் கரையொதுங்கியதுடன், கடல் வாழ் உயிரினங்கள் பலவும் இறந்திருந்தன.

இதனால், இலங்கையின் கடல்சார் சுற்று சூழல் உள்ளிட்ட பல பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. குறித்த காலப் பகுதியில் இந்த பகுதி மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

இதனால், கடல் தொழிலாளர்கள் மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், குறித்த கப்பலின் பாகங்களை மீட்டு, சுற்றுபுறச் சூழலை சுத்திகரிப்பதற்கான நடவடிக்கைகளை எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனமும், இலங்கை சமுத்திர பாதுகாப்பு அதிகார சபையும் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.

இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில், கப்பலின் பாகங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைக்கான அனுமதி அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கும், சீன நிறுவனம் ஒன்றிற்கும் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.

இலங்கை சமுத்திர பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர, பிபிசி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார்.

இந்த கப்பல் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமையவா வருகைத் தருகின்றது அல்லது எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமையவா வருகைத் தருகின்றது என சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுரவிடம் வினவினோம்.

”இந்த கப்பலை கரைக்கு கொண்டு வர வேண்டும் என இலங்கை அரசாங்கம், எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவனத்திற்கு அறிவித்தது. கப்பலின் உரிமையாளர்கள், சர்வதேச ரீதியில் விலை மனுவை கோரியிருந்தார்கள். இதன்படி, இரண்டு நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டன.

ஆழ்கடலிலுள்ள பாகங்களை வெளியில் கொண்டு வருவதற்கும், கப்பலை மீட்டெடுப்பதும் ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்படுமாக இருந்தால், அதற்கு மேலும் பல காலம் எடுக்கும். அதனால், ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்கள் வழங்குமாறு நாம் கோரிக்கை விடுத்தோம்.

இதன்படி, அமெரிக்க நிறுவனமொன்றுக்கும், சீன நிறுவனமொன்றுக்கும் இதனை வழங்கியுள்ளனர்.”

“கடந்த ஆண்டு அமெரிக்க நிறுவனம் அதன் பணிகளை செய்து நிறைவு செய்துள்ளது. கப்பலை மீட்டெடுப்பதற்கு சீன நிறுவனத்தை, எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவனம் தெரிவு செய்தது. கப்பலை மேலே எடுப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் கடந்த ஆண்டு இறுதி முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை முன்னெடுக்கப்பட்டது. கப்பலின் கீழ் பாகத்தில் இரும்பிலான சங்கிலிகளை வைத்து, கப்பலை மேலே இழுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன,” என இலங்கை சமுத்திர பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவிக்கின்றார்.

இந்த நடவடிக்கைகளுக்கு ஏன் சீன நிறுவனம் தெரிவு செய்யப்பட்டது?

விலை மனுக் கோரலில் கப்பல் நிறுவனத்திற்கு திருப்தியளிக்ககூடிய வகையில், கப்பலை மீட்டெடுப்பதற்கான தொழில்நுட்பத்தை கொண்ட நிறுவனமாக சீன நிறுவனம் காணப்பட்டமையினாலேயே, அந்த நிறுவனம் தெரிவு செய்யப்பட்டது என அவர் கூறுகின்றார்.

சீன நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டமை தொடர்பில் தான் குறித்த கப்பல் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பிய போது, எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனம் இந்த பதிலை வழங்கியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

கப்பல் தொடர்பிலான நிபுணர்களின் ஆலோசனைகளின் பிரகாரமே, சீன நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

எனினும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை மீட்டெடுப்பதற்காக சீன நிறுவனம் தெரிவு செய்யப்பட்டமைக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என அவர் மேலும் கூறுகின்றார்.

இந்த நிறுவனத்திற்கான அனைத்து கொடுப்பனவுகளையும், எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவனமே செலுத்தி வருவதாகவும் இலங்கை சமுத்திர பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர குறிப்பிடுகின்றார்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு, அந்த நிறுவனம் நட்டஈட்டை வழங்கியுள்ளதா?

‘சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு நிறுவனம் கொடுப்பனவுகளை வழங்கியுள்ளது. கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கிய நட்டத்திற்கும் கொடுப்பனவை வழங்கியது. மொத்தமாக சுமார் 9 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியுள்ளது. இதற்கு மேலதிகமாக சுற்றாடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்டஈட்டை பெற்றுக் கொள்வதற்காக அறிக்கையை நாம் தயாரித்துள்ளோம்.

அந்த அறிக்கையை சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அனுப்பியுள்ளோம். அதற்கு அவர்கள் சட்ட நடவடிக்கைகளை பெரும்பாலும் எடுப்பார்கள். அதற்கான நட்டஈட்டை இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை. சுற்று சூழலுக்கு ஏற்பட்ட நட்டத்தை இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை. அது பெரும்பாலும் பாரியதொரு தொகையாக அமையும். சட்ட நடவடிக்கைகளின் ஊடாகவே நாம் முன்னோக்கி செல்கின்றோம்,” என இலங்கை சமுத்திர பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர கூறுகின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.