போலியான முகவரியுடன் பொதி செய்யப்பட்ட கோதுமை மா வவுனியா வர்த்தக நிலையங்களில் விற்பனை!! (PHOTOS)
போலியான முகவரியுடன் பொதி செய்யப்பட்ட கோதுமை மா வவுனியா வர்த்தக நிலையங்களில் விற்பனை: பாவனையாளர் அதிகார சபையிடம் முறைப்பாடு
போலியான முகவரி மற்றும் நிலையான தொலைபேசி இலக்கமின்றி வவுனியா வர்த்தக நிலையங்களில் பொதி செய்யப்பட்ட கோதுமை மா விற்பனை இடம்பெறுவதாக வவுனியா ஊடக அமையத்தால் பாவனையாளர் அதிகார சபையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களின் நலன் கருதி கோதுமை மாவின் விலை 265 ரூபாயாக குறைக்கப்பட்ட போதும், வவுனியா மாவட்டத்தில் கோதுமை மாவின் விலையானது 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், பதிவு எதுவும் செய்யப்படாத போலியான பெயர் மற்றும் நிரந்தர தொலைபேசி இலக்கமின்றி, எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வேலை செய்யும் ஒருவரின் கைத்தொலைபேசி இலக்கத்துடன் கோதுமை மா பொதி செய்யப்பட்டு வவுனியா வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. உணவுப் பொருளை இவ்வாறு போலியான முகவரியுடன் விற்பனை செய்வதால் அதன் மூலம் ஏதாவது பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு எனவும் பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பில் குறித்த கோதுமை மாவினை விற்பனை செய்யும் வர்த்தக நிலைய உரிமையாளர்களை கேட்ட போது, தமக்கு வழமையாக கோதுமை மாவினை விநியோகம் செய்யும் விநியோகத்தர்களே குறித்த கோதுமை மா பொதிகளை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் பொது மக்களால் ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, வவுனியா ஊடக அமையம் குறித்த விடயத்தை வவுனியா மாவட்ட பாவனையாளர் அதிகார சபை மற்றும் உதவி அரச அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் மக்களின நலன்கருதி பாவனையாளர் அதிகார சபையும், மாவட்ட அரச அதிபரும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகவுள்ளது.