நாட்டில் உள்ள 130 கோடி மக்களை கடவுளின் வடிவமாக பார்க்கிறேன்- பிரதமர் மோடி..!!
உத்தராகண்ட் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் பூஜை செய்து வழிபட்டார். பின்னர் மானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3,500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 130 கோடி மக்களும் எனக்கு கடவுளின் வடிவம். கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் தரிசனங்களால் என் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டது, மனம் மகிழ்ச்சியடைந்தது, இந்தத் தருணங்கள் உயிர்ப்புடன் மாறியுள்ளன. இந்த ஆலயங்களின் பாழடைந்த நிலை அடிமை மனப்பான்மையின் தெளிவான அறிகுறி. இந்த ஆலயங்களுக்கு செல்லும் பாதைகள் கூட மிகவும் மோசமான நிலையில் இருந்தன.
இந்தியாவின் ஆன்மீக மையங்கள் பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டன. இதற்கு முந்தைய அரசுகளின் சுயநலம் தான் காரணம். இந்த ஆன்மீக மையங்கள் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு பக்தியை வளர்க்கும் இடங்கள் என்பதை அவர்கள் மறந்து விட்டனர். இன்று, காசி, உஜ்ஜயினி, அயோத்தி மற்றும் பல ஆன்மீக மையங்கள் இழந்த பெருமையையும், பாரம்பரியத்தையும் மீட்டெடுத்து வருகின்றன. அயோத்தியில் ராமர் கோவிலில் இருந்து குஜராத்தின் மா காளிகா கோவில் வரை இந்தியாவின் கலாச்சார மற்றும் பாரம்பரிய மேம்பாடு பிரதிபலிக்கிறது. நமது பாரம்பரியத்தின் பெருமை மற்றும் வளர்ச்சிக்கான அனைத்து முயற்சிகளும் 21-ம் நூற்றாண்டின் வளர்ச்சியடைந்த இந்தியாவின் இரண்டு முக்கிய தூண்கள். இன்று உத்தராகண்ட் மாநிலம் இந்த இரண்டு தூண்களையும் பலப்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.