காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு!!
வடக்கு அந்தமான் கடல், தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (21) உருவாகி அதே பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது
இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, ஒக்டோபர் 22ஆம் திகதியன்று அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இது ஒக்டோபர் 23 ஆம் திகதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் ஒக்டோபர் 24 ஆம் திகதி சூறாவளியாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது.
அதன்பிறகு, படிப்படியாக வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஒக்டோபர் 25-ம் திகதி மேற்கு வங்கம் மற்றும் பங்காளதேஷ் கடற்கரைக்கு அருகே சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்போது, காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ ஆக இருக்கும் அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு திசைகளுக்கு இடைப்பட்ட கடல் பகுதிகளில் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கலாம்.
கடற்பரப்புகளுக்கு மேல் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.