இந்த 7 நாட்களில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் இல்லை- அமைச்சர் அறிவிப்பு..!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு விதிகள் குறித்து குஜராத் உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி பட்டியலிட்டார். அப்போது அவர், அக்டோபர் 21 முதல் 27ம் தேதி வரை மாநிலத்தில் போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று அறிவித்துள்ளார். மேலும் இது முதல்வர் பூபேந்திர படேலின் மக்களுக்கு ஆதரவான முடிவு என்றும் அவர் கூறினார். இதுகுறித்து அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ” யாரேனும் விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக குஜராத் போலீசார் பூக்கள் கொடுத்து விதிகளை மீற வேண்டாம் என்று வற்புறுத்துவார்கள் என்றும் கூறினார். மேலும், “தீபாவளி என்பது விளக்குகளின் திருவிழா. மேலும் ரங்கோலி வண்ணங்கள், ஏராளமான இனிப்புகள், விளக்குகள் மற்றும் பட்டாசுகள் என உற்சாகத்துடன் வருகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில், முதல்வர் பூபேந்திர படேலின் மக்களுக்கு ஆதரவான முடிவு இது” என்று சங்கவி கூறினார். இவரது இந்த நடவடிக்கையை பலர் வரவேற்றனர். மேலும் இது, தானாக முன்வந்து விதிகளைப் பின்பற்ற மக்களை ஊக்குவிக்கும் என்றும் கூறினர். இருப்பினும், இது நகரங்களில் போக்குவரத்து குழப்பத்தை மோசமாக்க வழிவகுக்கும் என்று பலர் கூறியுள்ளனர்.