;
Athirady Tamil News

மைசூரின் பழமையான மகாராணி கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்தது..!!

0

கர்நாடக மாநிலம் மைசூர் ஜி.எல்.பி சாலையில் 106 ஆண்டுகால பழமையான மகாராணி கல்லூரி உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் இந்த கல்லூரியின் கட்டிட சுவரில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இடிந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் வேதியியல் துறையின் ஆய்வகம் இருந்தது. வெளியே மகாராணி கலைக் கல்லூரியின் நுழைவு வாயில் இருந்தது. சுவர் இடிந்து விழுவதற்கு முன், வேதியியல் துறைத் தலைவர் டாக்டர் கே.கே.பத்மநாபா, வழக்கம்போல் அறைக்கு வந்து, சுவரில் பெரிய விரிசல் இருப்பதைக் கண்டு, உடனடியாக முதல்வர் டாக்டர் டி.ரவியின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். உடனடியாக அறையைச் சரிபார்த்த அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறையின் கதவை மூடிவிட்டு, மின்சாரத்தை துண்டித்து விட்டு, யாரையும் உள்ளே நுழையவிடாமல் பார்த்துக் கொண்டார். பொதுவாக இந்த ஆய்வகத்தில் 30 மாணவிகளும் ஐந்து விரிவுரையாளர்களும் இருந்தனர். சிறிது தாமதம் ஏற்பட்டாலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும். கட்டிடம் இடிந்து விழுந்ததால், வேதியியல் மற்றும் விலங்கு அறிவியல் துறையின் ஆய்வக உபகரணங்கள் அனைத்தும் இடிந்து கிடக்கின்றன. ரூ.40 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாரம்பரிய கட்டிடத்தின் சுவரில் விரிசல் ஏற்பட்டதைக் கண்ட கல்லூரி ஊழியர்கள், அங்கிருந்த அனைவரையும் உடனடியாக வெளியேற்றினர். இதையடுத்து கல்லூரிக்கு 2 நாட்கள் விடுமுறை என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பழமையான இந்த கட்டிடத்தை பழுது பார்த்து பாதுகாக்க நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2 கோடி அனுமதிக்கப்பட்டு இன்று பூமி பூஜை விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து கல்லூரி முதல்வர் டாக்டர். டி.ரவி கூறுகையில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. பழைய கட்டிடம் என்பதால், ஒரு பகுதி ஈரமாகி விரிசல் அடைந்துள்ளது. காலை 10.25 மணியளவில் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டது. முதல் தளத்தை சரிபார்த்த பிறகு, ஆய்வகங்கள் மூடப்பட்டுள்ளன. பின்னர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிரிவுக்கு அனுமதி தடை செய்யப்பட்டது. அதன்பின்னர் மின் இணைப்பை துண்டிக்க அறிவுறுத்தினோம் என்றார். கட்டிடம் இடிந்து விழுந்ததையடுத்து, தீயணைப்பு மற்றும் அவசர சேவைப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இடிபாடுகள் மற்றும் இடிந்து விழுந்த கட்டிடத்தை சோதனை செய்து உள்ளே யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினர். இந்த மகாராணி அறிவியல் கல்லூரி மகாராஜா 10-வது சாமராஜேந்திர உடையார் தனது மனைவி கெம்பனஞ்சம்மன்னிக்காக கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.