சபரிமலையில் ஐப்பசி மாத பூஜை நிறைவு; மீண்டும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு..!!
அய்யப்பன் கோவில்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து தீபாராதனை காட்டினார். 18-ந் தேதி சன்னிதானத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சபரிமலை மேல்சாந்தியாக ஜெயராமன் நம்பூதிரி, மாளிகப்புரம் மேல்சாந்தியாக ஹரிகரன் நம்பூதிரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகள், வழிபாடுகளுக்கு பின் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடி அடைக்கப்பட்டது.
நடிகர் ஜெயராம் தரிசனம்
முன்னதாக ஐப்பசி மாத பூஜை இறுதி நாளான நேற்று தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் சகஸ்ரகலச பூஜை நடைபெற்றது. நடிகர் ஜெயராம் இரு முடிகட்டி வந்து சாமி தரிசனம் செய்தார். ஸ்ரீசித்திரை திருநாள் மகாராஜா பிறந்த நாளையொட்டி கோவில் நடை மீண்டும் நாளை (திங்கட்கிழமை) மாலையில் திறக்கப்படும். நாளை மறுநாள் சிறப்பு பூஜைகள் நடைபெற்று அன்று இரவு நடை அடைக்கப்படும். பின்னர் நடப்பாண்டின் மண்டல பூஜைக்காக அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்படும்.