தீபாவளி பரிசாக 75 ஆயிரம் பேர் பணி நியமனம்: மத்திய அரசில் 10 லட்சம் பேருக்கு வேலை; பிரதமர் மோடி ‘மெகா’ திட்டத்தை தொடங்கினார்..!!
அடுத்த நாடாளுமன்ற தேர்தல்2024-ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளதால், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு இப்போதே அதற்காக முழுவீச்சில் தயாராகத்தொடங்கி உள்ளது.
10 லட்சம் பேருக்கு வேலை
உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா பெருந்தொற்றின் பரவலுக்கு பின்னர், இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது, விலைவாசி உயர்ந்து வருகிறது, பணவீக்கம் அதிகரித்து வருகிறது என எதிர்க்கட்சிகள் ஓங்கிக்குரல் எழுப்பத் தொடங்கி உள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசு, செயல் வடிவத்தில் பதில் அளிக்கும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. அந்த வகையில் முதலில் வேலையில்லா திண்டாட்ட பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புகிறது. 18 மாத காலத்தில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசில் வேலை வழங்க பிரதமர் மோடி திட்டம் தீட்டி உள்ளார். இதற்கான உத்தரவை அவர் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கும், அமைச்சகங்களுக்கும் கடந்த ஜூன் மாதம் பிறப்பித்தார்.
அதைத் தொடர்ந்து பணி நியமனங்களுக்காக யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ரெயில்வே பணியாளர் வாரியம் என மத்திய அரசின் பல்வேறு பணி நியமன தேர்வு அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பிரதமர் மோடி தொடங்கினார்
மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும், அமைச்சகங்களிலும் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் ‘மெகா’ திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் நேற்று காணொலிக்காட்சி வழியாக தொடங்கி வைத்தார். அதே நேரத்தில் ‘ரோஸ்கர் மேளா’ என்றழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 75 ஆயிரம் பேருக்கு தீபாவளி பரிசாக பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. நாடெங்கும் 50-க்கும் மேற்பட்ட மத்திய மந்திரிகள் கலந்து கொண்டு இந்த பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்கள்.
பாரம்பரியம் தொடக்கம்
பணி நியமனம் பெற்றவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த நாளில், கடந்த8 ஆண்டுகளாக நாட்டில் நடைபெற்று வருகிற வேலை வாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு ரோஸ்கர் மேளா வடிவத்தில் ஒரு புதிய இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.