மும்பை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: மூவர் கைது..!!
சர்வதேச கூரியர் பார்சல் மூலம் இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட வாய்ப்புள்ளது என்று கூறிய உளவுத்துறையின் அறிவிப்பின் படி, மும்பை வருவாய் புலனாய்வு அதிகாரிகள், மும்பை சரக்கு விமான நிலைய வளாகத்தில் இருந்த ஒரு பார்சலை தடுத்து நிறுத்தினர். இந்த பார்சல் பாரிசில் இருந்து மும்பையின் புறநகரில் உள்ள நலசோபராவில் உள்ள ஒரு முகவரிக்கு அனுப்பப்பட்டது. பார்சலை முழுமையாக சோதனை செய்ததில், சட்டவிரோதமான சர்வதேச சந்தையில் ரூ. 15 கோடிக்கு மேல் மதிப்புள்ள மாத்திரை வடிவில் இருந்த 1.9 கிலோ ஆம்பெட்டமைன் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பார்சலை டெலிவரி செய்தபோது பார்சலை பெற வந்த நபர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இரண்டாவது நபர் கைதுசெய்யப்பட்டார். இரண்டாவது நபரிடம் விசாரணை நடத்தியபோது, பார்சலை பெற வந்த கடைசி நபரான நைஜீரியாவை சேர்ந்த நபரும் கைதுசெய்யப்பட்டார். இவ்வழக்கில் இதுவரை நைஜீரிய பிரஜை உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.