தமிழ்நாடு முழுவதும் மக்கள் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாக தீபாவளி கொண்டாட்டம்..!!
மக்களின் உள்ளங்களிலும், அவர்கள் இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்தோடும் நன்னாள் தீபாவளி. இன்று உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் மட்டுமல்ல, சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்களாலும், வெவ்வேறு காரணங்களைக்கூறி தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தினரை பொருத்தமட்டில் இது தீப ஒளி திருநாள். வாழ்வில் தீமைகள் அகன்று நன்மைகளை கொண்டுவரும் நாள். இந்து மத புராணங்களின்படி, யாராலும் அழிக்க முடியாத, ஆனால் தாயால் மட்டுமே இவனை அழிக்க முடியும் என்ற சாகாவரம் பெற்ற அசுரன் நரகாசுரனை கடவுள் திருமாலின் அவதாரமான மகாவிஷ்ணு, மிகவும் சமயோஜிதமாக சத்தியபாமாவை அம்பெய்த வைத்து கொன்ற நாள்தான் தீபாவளி. தீமையின் வடிவமான நரகாசுரன், தான் இறக்கும் தருவாயில் தாய் சத்தியபாமாவிடம் இந்த நாளை மக்கள் மகிழ்வுடன் கொண்டாடவேண்டும் என்று வரம் கேட்க, சத்தியபாமாவும் மக்கள் தீபம் ஏற்றி, புத்தாடை அணிந்து, இனிப்பு வழங்கி கொண்டாடுவர் என்று வரம் கொடுத்த நாளென்றும், வட மாநிலங்களில் இந்து மத கடவுள் ராமன் வனவாசத்தை முடித்துவிட்டு அயோத்திக்கு திரும்பிவந்த நாளில், மக்கள் புத்தாடை அணிந்து தீபம் ஏற்றி வரவேற்ற நாள்தான் தீபாவளி என்றும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலையே புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மக்கள் பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இந்த தீபஒளி திருநாளில் அனைவரின் வாழ்விலும் தீமைகள் விலகி நன்மைகள் பெறட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.