;
Athirady Tamil News

தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்- குடியரசுத் தலைவர் வாழ்த்து..!!

0

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. அதிகாலையிலேயே எழுந்து குளித்து புத்தாடை அணிந்த மக்கள், பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதேபோல் வட மாநிலங்களிலும் நேற்று முதல் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்றன. இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களையத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபாவளி நாளில் மக்கள் தங்கள் வீடுகளில் லட்சுமி தேவியை வணங்கி, ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடனும், வளமாகவும் வாழ பிரார்த்தனை செய்கிறார்கள். தீபாவளி பண்டிகை பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்க உணர்வை மேலும் வலுப்படுத்த ஒரு சந்தர்ப்பமாகும். தீபாவளியின் ஒளி நம் அகம் மற்றும் புற அறியாமை இருளை அகற்றும் ஞானத்தைக் குறிக்கிறது. ஒரு தீபத்தைப் போல நம் வாழ்வில் ஆற்றலும் ஒளியும் பரவட்டும். பின்தங்கியவர்களுக்கு உதவும் மனப்பான்மை மக்களின் மனதில் ஆழமாக வளரட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது: தீபத் திருநாளில் நம் நாட்டு மக்களுக்கும், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் எனது அன்பான, மகிழ்ச்சிகரமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரம்பரிய உற்சாகத்துடனும், சந்தோஷத்துடனும் கொண்டாடப்படும் தீபாவளி, பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகு, சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோருடன் ஸ்ரீ ராமர் அயோத்திக்குத் திரும்பியதைக் குறிக்கிறது. மேலும் ராம ராஜ்ஜியத்தின் வருகையையும் தீபாவளி குறிக்கிறது.

தீபாவளி என்பது செல்வச் செழிப்பின் தெய்வமான லட்சுமி தேவி மற்றும் ஞானம், நல்லதொரு எதிர்காலத்தை அருளும் அதிர்ஷ்டத்தின் கடவுளான விநாயகப் பெருமானை வழிபடுவதற்கான சந்தர்ப்பமாகும். இந்த தீபத் திருநாள் நம் வாழ்வில் ஞானம், இறையச்சம், செழிப்பு மற்றும் அமைதியைக் கொண்டு வரட்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.