;
Athirady Tamil News

யாழில் போதையை கட்டுப்படுத்த இராணுவத்தின் விசேட படை பிரிவு!!

0

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்த யாழ்.,மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேயசுந்தரவின் தலைமையில் விசேட படைப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக பலாலி இராணுவ தலைமையகம் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில்,

வடக்கில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கஞ்சா தொகையானது கைப்பற்றப்பட்டது.

இந்தியாவிலிருந்து யாழ்ப்பணப் பகுதிக்கு மிகவும் பிரமாண்டமான முறையில் போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இளம்சந்ததியினரும் அவற்றிற்கு அடிமையாகின்ற தன்மையானது வெகுவாக அதிகரித்துள்ளது.

அந்த வகையில் இந்த துர்ப்பாக்கிய நிலையினை இல்லாதொழிப்பதனை நோக்கமாகக் கொண்டு யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேயசுந்தர தலைமையில் விசேட படைப் பிரிவானது உருவாக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் மற்றும் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் ஊடாக யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல்களை தடுத்தல், கைதுசெய்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அதனுடன் தெடர்புள்ள நபர்களை நீதி முன்நிறுத்துதல் போன்ற செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

51 ஆவது காலாட் படைப்பிரிவிற்கு கீழ் காணப்படுகின்ற ஜே 150 கிராமசேவகர் பிரிவின் மாதகல் கிழக்கு பகுதியில் 513 ஆவது காலாட் படைப்பிரிவின் 16 ஆவது கெமுணு ஹேவா படையணியினரால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 100 கிலோக்கிராம் கஞ்சாவுடன் அதனை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக விசேட அதிரடிப்படையினரிடம் கையளிக்கப்பட்டது.

மேலும் இதுபோன்ற கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முகமாக யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்துக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் பொதுமக்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன் அவை தொடர்பான மேலதிக தகவல்களை பாதுகாப்பு படைத் தலைமையகம், வயாவிளான் எனும் முகவரிக்கோ அல்லது 076 6907751 எனும் தொலைபேசி இலக்கத்திற்கோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.